நடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் சினிமாவை விட்டு ஒதுங்கி சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள். இன்னும் சிலர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர்.
இந்த நிலையில் காதல் திருமணங்கள் சிறந்ததா? என்பதற்கு நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகை தமன்னா கூறியதாவது:–
காதல், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையில் இருக்கிறது. இருவரும் விட்டுக் கொடுக்கணும் நான் உயர்ந்தவர் நீ தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. ஒருவரை யொருவர் மதிக்கணும்.
இது மாதிரி யார் இருக்கிறார்களோ அங்கு காதல் இருக்கும். எனக்கு இதுவரை காதல் வரவில்லை. காதலிக்க நேரமும் இல்லை.
எனக்கு பொருத்தமானவர் யார், அவர் எங்கு இருக்கிறார்? என்று சிந்திக்கவும் நேரம் இல்லை. ஓய்வே இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.
எனவேதான் எனக்கு கணவராக வருபவரை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோரிடம் விட்டு விட்டேன். நல்ல மாப்பிள்ளையை அவர்களை விட யாராலும் தேர்வு செய்ய முடியாது.
எனக்கு பொருத்த மானவரை அவர்கள் தேர்வு செய்வார்கள். அம்மா, அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை சுருதிஹாசன் கூறியதாவது:–
காதல் சந்தோஷமான விஷயம். அது ஒரு தடவை தான் வர வேண்டும். எனவே யாரை காதலிக்கிறோம் என்பது முக்கியம்.
நமக்கு சரிபட்டு வருவாரா? பொருத்த மானவர்தானா? என்றெல்லாம் யோசித்து காதலிக்க வேண்டும். காதலித்த பிறகு தவறானவர் என்று தெரிந்தால் சரி செய்ய முடியாது.
பெண்கள் திருமணத்துக்குப் பிறகு கணவன், குழந்தை என்று ஆகிவிட வேண்டும். குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிப்பது எனக்கு பிடிக்காது.
ஆண்கள் மட்டும் பிடித்த மாதிரி வேலை செய்யலாம். பெண்கள் அப்படி இருக்க கூடாது என்பதில் நியாயம் இல்லை. நான் சினிமாவை உயர்வாக மதிக்கிறேன்.
திருமணத்துக்கு பிறகும் சினிமாவை விட மாட்டேன். கடைசி வரை நடித்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.