கொலம்பியாவின் Magangue பகுதியில் 11 வயது மகனை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தாயாரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Magangue பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் 11 வயது சிறுவனை காலில் விலங்கு வைத்து சங்கிலியால் பிணைத்து தாயார் கொடுமை படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த பொலிசார், குறிப்பிட்ட அந்த குடியிருப்புனுள் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சமூக ஆர்வலர்களும் பொலிசாரும் அடங்கிய குழு ஒன்று திடீரென்று அந்த வீட்டினுள் நுழைந்து சோதனையிட்டுள்ளனர்.
அப்போது சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அந்த சிறுவன் போதிய உணவு மற்றும் ஊட்டச்சத்து இன்றி மெலிந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்து அந்த சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற முதலுதவி குழுவினர், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இளஞ்சிறுவனை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அந்த தாயாரை உடனடியாக கைது செய்த பொலிசார், அவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
சிறுவனின் துர்நடத்தை காரணமாகவே தாம் அவனை சங்கிலியால் பிணைத்திருந்ததாக கூறும் அந்த தாயின் விளக்கத்தை சமூக ஆர்வலர்களும் பொலிசாரும் ஏற்க மறுத்துள்ளனர்.