கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியருக்கு ரூ. 8 லட்சம் பரிசு !

கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கி, அதற்கு ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்த சன்மய் வேத் என்ற அமெரிக்க வாழ் இந்தியருக்கு, ரூ. 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசளித்தது.
கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியருக்கு ரூ. 8 லட்சம் பரிசு !
அந்தத் தொகையை சேவைப் பணிகளுக்கு அளிப்பதாக சன்மய் வேத் அறிவித்ததை அடுத்து, அந்தப் பரிசுத் தொகை இரு மடங்காக (ரூ. 8.14 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது. 

இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள வலைப்பூ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: 

சன்மய் வேத் என்ற இணைய ஆய்வாளர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் இணைய தளத்தை விலைக்கு வாங்கி ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்த செய்தி அனைவருக்கும் தெரியும். 

இதையடுத்து, அவருக்கு ரூ. 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசாக அறிவித்திருந்தது. 

அந்தத் தொகையை வாழும் கலை அமைப்பின் சேவைப் பணிகளுக்கு அளிக்க உள்ளதாக சன்மய் வேத் அறிவித்திருந்தார்.
எனவே, பரிசுத் தொகையை இரட்டிப்பாக வழங்குவது என முடி வெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த வலைப்பூ பதிவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான சன்மய் வேத், தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவது அவரது பொழுது போக்காகும். 

அவ்வாறு ஒருமுறை இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவதற்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது, "கூகுள் டாட் காம் விற்பனைக்கு' என்ற தகவல் வந்தது.

முதலில், அவர் அதை நம்பவில்லை என்றபோதிலும், அந்தத் தகவல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்ததால் சன்மய் வேத் கூகுள் டாட் காமை விலைக்கு வாங்குவதற்காக, பணம் கட்டினார்.

கூகுள் டாட் காம் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு நிமிடத்துக்குள், அந்த நடவடிக்கையை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது. 
பிறகு, அவ்வாறு தவறான அறிவிப்பு வெளியானதை சுட்டிக் காட்டியதற்காக சன்மய் வேதுக்கு பரிசளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது. 

அந்தத் தொகையை, "வாழும் கலை' அமைப்பின் சார்பில் நடத்தப்படும் 404 இலவசப் பள்ளிக் கூடங்களின் வளர்ச்சிக்காக அளிக்க உள்ளதாக, சன்மய் வேத் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings