கிங் மேக்கராக அல்ல... 'கிங்'காக இருப்பேன் விஜயகாந்த் பேச்சு !

நான் கிங் மேக்கராக (வேறு யாரையும் ஆட்சியில் அமர்த்துவதாக) இருக்க வேண்டாம் என்றும், ‘கிங்’ ஆக (தே.மு.தி.க. ஆட்சி அமைக்கும் வகையில்) இருக்க வேண்டும் என்றும் தொண்டர்கள் விரும்புவதாக விஜயகாந்த் பேசினார்.
தே.மு.தி.க. மாநாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. பிரதான கட்சிகளில் ஒன்றான தே.மு.தி.க. தற்போது அரசியல் சதுரங்கத்தில் தனது காய்களை நகர்த்த தொடங்கி இருக்கிறது. 

தி.மு.க., பாரதீய ஜனதா, மக்கள்நல கூட்டணி சார்பில் தே.மு.தி.க.வுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் தே.மு.தி.க. மாநாட்டுக்கு பாரதீய ஜனதா, மக்கள்நல கூட்டணி வாழ்த்து தெரிவித்தது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தே.மு.தி.க. மாநாடு காஞ்சீபுரம் வேடலில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டு மேடைக்கு ‘அண்ணா’ பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கண க்கான தொண்டர்கள் மாநாட்டு அழைப்பிதழுடன் வந்திருந்தனர். மாநாட்டு மேடைக்கு அக்கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் இரவு 8.25 மணிக்கு வந்தார். 

அவரை பார்த்ததும் தொண்டர்கள் ஆர்ப்பரித்து, வாழ்த்து கோஷம் எழுப்பினர். முரசு அடித்து மாநாட்டை தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ராணுவம் போல்...

அதனை தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கியது. காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை டி.முருகேசன் வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செ.தங்கபாண்டியன், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எஸ்.கரீம் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வரவேற்று பேசினர். அதனை தொடர்ந்து இரவு 8.45 மணிக்கு விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் குலுங்கி விட்டது. இதற்கு இந்த கூட்டமே சான்று. இதற்காக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என் தொண்டர்களை நான் அறிவேன். பார்த்தசாரதி எம்.எல்.ஏ. சொன்னாரே ‘வெட்டிவா என்றால் தலையை கொண்டு வருவேன்’ என்று அது தான் என் தொண்டர்கள். 

ராணுவம் போல் இருப்பவர்கள் என் தொண்டர்கள். என் குடும்பம் சிறியது. பணத்தை சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

எதிரிகள் இல்லை

எனக்கும், என் மனைவிக்கும் ஒரு வேளை சாப்பாடு போட மாட்டீர்களா? இது தான் வேண்டும். 234 தொகுதிகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லையென்று ஜெயலலிதா சொன்னார்.

இப்போது இந்த கூட்டத்தை பார்த்து உங்களுக்கு கண்கள் கட்டி விட்டதா? ஆட்சியில் இருப்பதால் தான் இடைத்தேர்தலில் ஜெயிக்கிறீர்கள். பர்கூர் தொகுதியில் ஏன் தோற்றீர்கள்.

சட்டசபைக்கு நான் போனால் கேள்வி வேற மாதிரி இருக்கும். 2004-ல் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பூஜ்ஜியம் பெற்றீர்களே? ஜீரோ பன்னீர்செல்வம் இருக்கிற வரை இந்த நாடும், உங்கள் கட்சியும் உருப்படாது. சாலைகள் எப்படி இருக்கு? குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. 

5 ஆண்டுகளுக்கு முன்பு 20 லிட்டர் தண்ணீர் கொடுப்பேன் என்றார்கள். ஆனால் ஆட்சியின் கடைசியில் செய்கிறீர்கள். ஊழல் செய்த கை நிற்காது. அதற்கு எடுத்து காட்டு தான் இந்த ஆட்சி.

நடிக்க தெரியாது

சினிமாவில் நடிக்க தெரியும். மக்களிடம் எனக்கு நடிக்க தெரியாது, ஏமாற்ற தெரியாது. விஜயகாந்த் என்ன சொல்வார்? மவுனமாக இருக்கிறார் என்கிறார்கள். இந்த விஜயகாந்த் அமைதியாக, தெளிவாக இருக்கிறார். 

மக்களை அடமானம் வைக்க மாட்டேன். என் தொண்டர்களை எப்படி விலைக்கு வாங்க நினைத்தீர் கள் என்பதும் எனக்கு தெரியும்.

(இவ்வாறு பேசிய அவர் தொண்டர்களை பார்த்து கூட்டணிக்கு போக வேண்டுமா? வேண்டாம் என்கிறீர்களா? என்று கேட்டார். கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் கூறினார்கள்.)

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். கண்ணை முடி கிணற்றில் குதித்து விடு என்று தலைவர் சொன்னால், தலைவர் குடும்பத்தை பார்த்துக்கொள்வார் என்று குதித்து விடுவார்கள். குடும்பத்தை விஜயகாந்த் காப்பாற்றுவான் என்று நினைப்பீர்கள். 

தலைவரை பற்றி தொண்டர்களுக்கு தெரியாதா? நல்ல மனிதர் என்று நீங்கள் சொல்வதை எப்போதும் காப்பாற்றுவேன். விஜயகாந்த் எப்போதும் ஏழை மக்களுக்காகத்தான் வாழ்ந்தான் என்று தான் இருக்க வேண்டும். இதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அ.தி.மு.க. நல்ல கட்சியா? புதிய வாக்காளர்கள் எந்த பக்கம் என்பதை சொல்ல வேண்டும்.

‘கிங் மேக்கர்’

நீங்கள் சொல்லுங்கள், நான் கிங் மேக்கராக இருக்க வேண்டுமா? ‘கிங்’ ஆக இருக்க வேண்டுமா? கிங் ஆக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது குறித்து பின்னர் முடிவு செய்வோம். நான் கிங்காக இருந்தால் நீங்களும் கிங் தான். மாநாடு முடிந்து நீங்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பது தான் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

இந்த மாநாடு திருப்புமுனையை உருவாக்கும் என்பது உறுதி. 2005-ல் கட்சி ஆரம்பித்த போது லஞ்ச, ஊழலுக்கு அப்பாற்பட்டு புதிய அரசியலை புதிய ஆட்சியை உருவாக்குவோம் என்றோம். 

அதில் இருந்து நாம் தடம் புரளவில்லை. காஞ்சியில் அண்ணா திருப்புமுனையை உருவாக்கினார். அதே திருப்புமுனையை விஜயகாந்த் உருவாக்குவார்.

அ.தி.மு.க. என்றாலே அனைத்திலும் தில்லுமுல்லு, ஊழல் செய்யும் கட்சி என்றாகிவிட்டது.

மழை வெள்ளத்தின்போது என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். சென்னை உள்பட 3 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. நேரடியாக சென்று எந்த மக்களையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை. ஆனால் மக்களை சந்தித்த ஒரே தலைவர் விஜயகாந்த் தான். யார் காரணம்?

முற்றுப்புள்ளி

சட்டசபையில் மக்கள் பிரச்சினை பற்றி பேசினால் வெளியேற்றுகிறார்கள். மோசமாக அரசியலை நடத்துகிறார்கள். உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றீர்களா? என்று கேட்கிறார்கள்.

எங்கள் தயவில் தான் உங்கள் அம்மா முதல்-அமைச்சராகவும், நீங்கள் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கிறீர்கள். எங்களை பார்த்து பூஜியம் என்கிறார்கள், 5 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் கட்சி எப்படி இருந்தது. மமதையில் பேசக்கூடாது. 

சட்டசபையில் மக்கள் பிரச்சினை பற்றி பேசுங்கள். நீங்கள் எங்களை பேசினால், எங்களுக்கும் பேச தெரியும். இளைஞர்கள் பட்டாளம் கொண்ட கட்சி எங்கள் கட்சி. வீண் ஜம்பங்களை யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

லஞ்சம் உள்ள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நல்ல முடிவை வாக்குகள் மூலம் பதிய வைக்க வேண்டும்.

லஞ்சம் ஊழல் இல்லாத நல்ல நிர்வாகத்தை உருவாக்குவோம். விஜயகாந்த் கிங்கா இருக்கணுமா? கிங் மேக்கராக இருக்கணுமா? கிங்கா தான் இருக்கணும். அதை தான் தொண்டர்கள் விரும்புவார்கள். அதற்கான நேரம் வரும். அதை நீங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தே.மு.தி.க. சார்பில் காஞ்சீபுரத்தில் நடத்தப்பட்ட திருப்பு முனை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஊழல் இல்லாத நல்லாட்சி

* தமிழகத்தில் ஊழல் இல்லாத நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திட தே.மு.தி.க. பாடுபடுமென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

* தமிழக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் சுமார் 84 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் நிதியை ஒதுக்கி, வெற்று அறிவிப்பு ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுகிறது.

குடிசை இல்லா நகரங்கள்

* தமிழகத்தில் வறுமையை ஒழித்திட, படித்த, படிக்காத இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கிடுவோம். குடிசை இல்லா நகரங்களை நிர்மானித்து, அனைவருக்கும் சொந்த வீடு என்கின்ற லட்சியத்தை அடையும் வகையில், தமிழகத்தின் வளர்ச்சிக்குரிய திட்டங்களை தே.மு.தி.க. செயல்படுத்தும்.

* தமிழகத்தில் விவசாயமும், நெசவும் தன்னிறைவு அடையும் வகையில், விவசாயத்திற்கும், ஜவுளி தொழிலுக்கும் தேவையான கடன் மற்றும் மானியம் வழங்குதல், 

வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும். தமிழகத்தில் உள்ள நதிகள் இணைக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.

மக்கள் நிராகரிக்க வேண்டும்

தே.மு.தி.க. இதுபோன்ற நல்ல பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு, தமிழக மக்கள் தே.மு.தி.க.விற்கு உறுதுணையாக இருக்கவேண்டும். தற்போது நடைபெறுகின்ற ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாநாடு ஏகமனதாக வரவேற்று அங்கீகரிக்கிறது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

காட்டாங் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் வீராபுரம் எத்திராஜ் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
Tags:
Privacy and cookie settings