'தென்னகத்தின் கும்பமேளா' என்று பெருமையுடன் அழைக்கப்படும் மகாமக பெருவிழா இன்று கும்பகோணத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி யுள்ளது.
இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.
குரு சிம்மராசியில் இருக்கும் போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004ம் அண்டு மகாமக விழா நடைபெற்றது.
தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகம் விழா கொண்டாடப் படுகிறது. இது தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப் படுகிறது.
கோவில்களில் கொடியேற்றம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர் ஆகிய 6 சிவ ஆலயங்களில் கோவில்களில் பகல் 12மணிக்கு மேல், 1 மணிக்குள் கொடியேற்றப் பட்டது.
இதனைத் தொடர்ந்து மகாமக நிகழ்வுகள் தொடங்கியுள்ளன.
சிறப்பு அபிஷேகம் பூஜைகள்
நான்கு கரைகளை சுற்றி வந்தபிறகு, வடக்கு கரைக்கு புனித தீர்த்தங்கள் அடங்கிய கலசங்கள் கொண்டு வரப்பட்டன. அங்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முன்னிலையில்,
இலுப்பபட்டு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் குழுவினர் குளத்தின் படிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்தனர்.
இலுப்பபட்டு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் குழுவினர் குளத்தின் படிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்தனர்.
20 புண்ணிய தீர்த்தங்கள்
மகாமகம் விழாவை முன்னிட்டு நாட்டிலுள்ள புண்ணிய நதிகளான கங்கை, நர்மதா, கோதாவரி உள்ளிட்ட 20 புண்ணிய தீர்த்தங்களின்
நீர் அடங்கிய கலசங்கள் கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக மகாமக குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து மகாமக குளத்தைச் சுற்றியுள்ள 16 சோடச லிங்கங்களுக்கும் அலங்கார தீபம், கங்கா ஆரத்தி செய்தனர்.
இதையடுத்து, 20 புண்ணிய தீர்த்தங்களும் மகாமக குளத்தின் 20 புனித கிணறுகளில் உள்ள நீரில் சேர்க்கப் பட்டது.
குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர்
மகாமகம் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே ஆயிரக் கணக்கான பக்தர்கள் மகாமகம் குளத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதனால் ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிப்ரவரி 22-ல் தீர்த்தவாரி
பிப்ரவரி 22ம் தேதி மகாமகம் தினத்தன்று நடைபெறும் தீர்த்தவாரியில் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் படுள்ளன.
தீயணைப்பு படையினர், 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தயார் நிலையில் உள்ளன.