நடிகர்களுக்காக சண்டையிடாமல் அரசியலை விவாதிப்பீர்.. விஜய் சேதுபதி | Don't Fight for actors to debate politics !

ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகவாவது இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'சேதுபதி'.
பிப்ரவரி 19ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் விஜய்சேதுபதி. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்,

இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது: "சினிமா நடிகர்களுக்காக இளைஞர்கள் சண்டையிட்டுக் கொள்வது கஷ்டமாக இருக்கிறது.

ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சண்டையிட்டு கொள்வதைப் பார்க்கிறேன். அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதில் இருக்கும் ஆர்வத்தில் ஓரளவையாவது அரசியலில் செலுத்த வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். 

முடிந்த அளவுக்கு அனைவருமே ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகவாவது இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 18 வயதைக் கடந்த இளைஞர்கள் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அதை ஒரு முக்கியமான தேவையாக பார்க்கிறேன்.

உறுப்பினராக இருக்கும்போது இளைஞர்கள் தேடித் தேடி தெரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். ட்விட்டர், ஃபேஸ்புக் வந்தால் கூட ஜாதிய எண்ணம் இன்னும் போகவில்லை எனத் தோன்றுகிறது. அந்த எண்ணம் ஆழமாகிறது, அது ஏன் என்று தெரியவில்லை. 

இன்று நிறைய காதல் திருமணங்கள் நடக்கிறது, அது நல்ல விஷயம். ஜாதியை மையப்படுத்தி சில திருமண விளம்பரங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
Tags:
Privacy and cookie settings