இதுவரை தான் நடித்த எந்தக் கதாபாத்திரமும் தன்னைப் பிரதிபலிக்கவில்லை என்று சொல்கிறார் பாலிவுட்டின் பென்சில் பெண் சோனம் கபூர்.
1986 ல் கடத்தப்பட்ட ‘PAN Am’ விமானத்தில் நூற்றுக் கணக்கான பயணிகளைக் காப்பாற்றுவதற்காகத் தன் இன்னுயிரைத் இழந்தவர் விமானப் பணிப்பெண் நீரஜா பனோட்.
அவரது வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் ‘நீரஜா’ திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.
அதில் துணிச்சலான விமானப் பணிப்பெண் ‘நீரஜா’வாக நடித்திருக்கும் சோனம் கபூர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின் சுருக்கமான வடிவம் இது…
எல்லோருக்கும் தெரிந்த ஒரு நிஜக் கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டு வருவது உங்களுக்கு எந்த அளவுக்குக் கஷ்டமாக இருந்தது?
எல்லோருக்கும் நீரஜா பனோட் பற்றி ஞாபகப் படுத்துவது தான் எங்கள் நோக்கம். ‘அசோகசக்ரா’ விருதைப் பெற்ற முதல் இளம் பெண் அவர்.
அந்த விமானக் கடத்தல் நிகழ்ச்சி நடந்த போது எனக்கு ஒரு வயது. இந்த உண்மைக் கதையைத் திரையில் சொல்வதற்கு இது சரியான நேரமும் கூட.
இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு பொறுப்பு தேவைப்பட்டது. நீரஜா யார், அவர் எப்படி இருந்தார், என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதனால், அந்தக் கதாபாத்திரத்துக்கு எந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு நேர்மையாக இருக்க முயற்சித்திருக்கிறேன்.
நீரஜாவின் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்களை நான் சந்தித்தேன். நிறைய நேர்காணல்கள் எடுத்தேன். இணையத்தில் அவரைப் பற்றிக் கொடுக்கப் பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தையும் படித்தேன்.
விமானப் பணிப்பெண்ணுக்கான பயிற்சியை முடித்தேன். இந்த மாதிரி நிறையச் செய்தேன். இப்படிச் செய்துதான் ஆக வேண்டும். ஏனென்றால், விமானத்தில் பயணிகளுக்கு எப்படிச் சேவை செய்ய வேண்டும்,
அறிவிப்புகள் எப்படிச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இயல்பாகவே நமக்குத் தெரியாது. அதற்காக நீங்கள் பயிற்சி செய்து தான் ஆக வேண்டும்.
இதனால் இந்தப் படத்தை எடுத்து முடிக்க எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது.
சமீபத்தில் ஹிட்டான பிரேம் ரதன் தன் பாயோ படத்தில் நீங்கள் ஏற்ற கதாபாத்திரத்துக்கு இது முற்றிலும் நேர்மாறாக இருக்கிறதே?
கடந்த ஐந்து ஆண்டுகளாக எனக்குக் கிடைக்கும் மாறுபட்ட கதாபாத்திரங்களால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
திரையில் வித்தியாசமான மனிதர்களாக இருப்பதற்கும், என் நடிப்புத்திறனை ஆராய்வதற்கும், என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்வதற்கும் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கடந்த ஆண்டு, நீங்களும், உங்கள் தங்கை ரியாவும் சேர்ந்து ஃபேஷன் ஸ்டோர் ஒன்றைத் தொடங்குவதாக அறிவித்திருந்தீர்கள். அது எப்படிப் போகிறது?
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அதைத் திறக்கப்போகிறோம். அது ஒரு ‘ஹை ஸ்ட்ரீட் பேஷன்’ கடையாக இருக்கும். 400 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை அங்கே பொருட்கள் கிடைக்கும்.
இது உங்களை, என்னைப் போன்ற நிஜமான பெண்களுக்கான கடை. இப்போது ஏன் இப்படி என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறீர்கள்?
அந்தக் கடையில் விற்கப் போகும் ஆடைகள் உண்மையிலேயே நீங்கள் அணியும் ஆடைகளைப் போல் இருக்குமா?
ஆமாம், நான் நிஜ வாழ்க்கையில் என்ன அணிய விரும்புவேனோ, அப்படி தான் இருக்கும். எனக்கு ‘மாடல்’போன்ற உடலமைப்பு கிடையாது. அதனால், எனக்கு உடை தேர்ந்தெடுப்பது கடினம்.
என்னைப் போன்று தான் பல இந்தியப் பெண்களும் கஷ்டப்படுகிறார்கள். அதனால், அவர்களுக்கு ஏற்றபடி ஆடைகளை வடிவமைக்கத் திட்ட மிட்டோம். நானே வடிவமைத்த ஆடைகளை நான் அணிவதை இனி பார்ப்பீர்கள்.
நீங்களும், உங்கள் தங்கையும் அனுஜா சவுஹானும் ‘பேட்டில் ஆஃப் பிட்டோரா’ புத்தகத்தைத் தழுவிப் படமெடுக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள்...
ஆமாம், ஆனால் நீரஜா படம் வெளியாகும் வரை வேறு எந்தப் படத்தைப் பற்றியும் பேசக் கூடாது என்ற கொள்கை முடிவு எடுத்திருக்கிறேன். அது நீரஜா குடும்பத்துக்கு நான் செய்யும் மரியாதை.
நீங்கள் படம் இயக்கத் திட்ட மிட்டிருக்கிறீர்களா?
இன்னும் சில ஆண்டுகளில் நிச்சயமாகச் செய்வேன். இயக்கம் - நடிப்பு இரண்டையும் செய்வேன்.
Tags: