ஊராட்சி தலைவி மகன் பலி... போலீஸ் விசாரணை !

நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஊராட்சி தலைவி மகன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊராட்சி தலைவி மகன் பலி... போலீஸ் விசாரணை !
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ராயபுரம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் ராயபுரம் ஊராட்சி தலைவியாக உள்ளார். இவருடைய மகன் தவசுமணி (வயது28).

இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் மலைச் செல்வனுடன் மோட்டார் சைக்கிளில் நீடாமங்கலத்துக்கு சென்று விட்டு ராயபுரத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் சம்பாவளி பகுதியில் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் தவசுமணி படுகாயமடைந்தார்.

தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் ஆம்புலன்சு வர கால தாமதமானதால் தொழில் அதிபர் ஒருவர் தனது காரில் படுகாயமடைந்த தவசு மணியை ஏற்றி சென்று தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தார்.
பின்னர் தவசுமணியை அங்கிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

தவசுமணியின் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றதா? அல்லது 

பின்னால் வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி இந்த விபத்தை நிகழ்த்தி விட்டு யாரேனும் தலை மறைவாகி விட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த தவசு மணியின் தந்தை செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சி தலைவி மகன் இறந்த சம்பவம் நீடாமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings