இந்தியா, பாகிஸ்தான் மக்கள் ஒருவருக் கொருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் லாகூரில் இருந்து டெல்லிக்கு தோஸ்தி பஸ் போக்குவரத்து தொடங்கப் பட்டது.
பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் இந்த பேருந்தை இயக்குகிறது. இந்நிலையில் இந்தியாவில் அரியானா மாநிலத்தில் ஜாட் சமுகத்தினரின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வன்முறை
மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. முக்கிய சாலைகள் மற்றும் ரெயில் பாதைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
இதனால், பாகிஸ்தானில் இருந்து வரும் தோஸ்தி பஸ் மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிறுத்தி வைக்கும் படி இந்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி போக்குவரத்து நிறுத்தப் பட்டது. தற்போது அரியானாவில் அமைதி திரும்பியதை யடுத்து, பாகிஸ்தானுடனான பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்தை தொடங்க இந்தியா அனுமதி அளித்தது.
அதன்படி இன்று லாகூரில் இருந்து தோஸ்தி பஸ் டெல்லிக்கு புறப்பட்டது. அதில் பெரும்பாலான இந்தியர்கள் உள்ளிட்ட 21 பயணிகள் பயணம் செய்ததாக பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
போராட்டம் முடிவுக்கு வந்ததால் ரெயில் போக்குவரத்து நாளை தொடங்கும் என பாகிஸ்தான் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.