தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டால், அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக நடிகை குஷ்புவை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் கட்சியின் இந்தத் திட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்குமா என்று தெரியவில்லை.
இருப்பினும் எப்படியாவது குஷ்புவை வைத்து ஜி.கே.வாசனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.
மயிலாப்பூர் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிடலாம் என்று கருதப்படுவதால் அங்கு குஷ்புவுக்காக சீட் கேட்டு ஒருவர் மூலம் விருப்ப மனுவும் கொடுக்க வைத்துள்ளனராம்.
ஜி.கே.வாசன் அவரது தந்தை ஜி.கே.மூப்பனார் பாணியில் இதுவரை எந்தத் தேர்தல் களத்திலும் நின்றதில்லை. ராஜ்யசபா தேர்தலில் மட்டுமே இதுவரை போட்டி யிட்டுள்ளார் வாசன்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா? வரும் சட்டசபைத் தேர்தலில் வாசனை தேர்தல் களத்தில் இறக்க கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.
அவரை சென்னையில் போட்டியிட வைக்கலாம் என்றும் திட்டம் போட்டு வருகின்றனராம். அவர் எங்கு போட்டியிடுவார் என்று தெரியவில்லை.
ஆனால் சென்னையில் போட்டியிட கட்சியினர் விரும்புகிறார்களாம். குறிப்பாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்களாம்.
சிலர் தஞ்சை மாவட்டத் தொகுதி ஒன்றில் வாசன் போட்டியிடலாம் என்று விரும்புகின்றனராம். இருப்பினும் இது தொடர்பாக உறுதியாக எதுவும் தெரியவில்லை.
இந்த நிலையில் அவருக்கு எதிராக குஷ்புவைக் களம் இறக்க காங்கிரஸ் திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
வாசன் மயிலாப்பூரிலோ அல்லது வேறு தொகுதியிலோ போட்டியிட்டால் அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் குஷ்பு போட்டியிடக் கூடுமாம். இதற்கு இளங்கோவன் தரப்பு தீவிரமாக முயற்சித்து வருகிறதாம்.
குஷ்புவுக்காக மயிலாப்பூரில் டிக்கெட் கேட்டு அசோகன் என்பவர் விருப்ப மனு கொடுத்துள்ளாராம். இதை குஷ்புவும் உண்மை தான் என்றும் கூறியுள்ளாராம்.