கும்பகோணம் மகாமக விழா சிறப்பு மலர் கலெக்டர் வெளியிட்டார் | Kumbakonam makamaka collector issued a special flower festival !

கும்பகோணத்தில் மகாமகம் விழா வருகிற 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தஞ்சை சரசுவதி மகால் நூலகம் சார்பில் மகாமகம் சிறப்பு மலரினை கலெக்டர் சுப்பையன் நேற்று வெளியிட்டார்.
மகாமக விழா

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடைபெறும். இந்த மகாமகம் விழா வருகிற 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதன் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தஞ்சை சரசுவதிமகால் நூலகம் சார்பில் மகாமகம் சிறப்பு மலர் நேற்று

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுப்பையன் வெளியிட, இந்த மலரினை சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் பூங்கோதை பெற்றுக்கொண்டார்.

பின்னர் கலெக்டர் சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகாமக விழாவை முன்னிட்டு தஞ்சை சரசுவதி மகால் நூலகம் சார்பில் சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. 260 பக்கங்களை கொண்ட இந்த மலரில் மகாமகம் தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த மலரின் விலை ரூ.300 ஆகும். மேலும் சரசுவதி மகால் நூலகம் சார்பில் மகாமகம் மாத காலண்டர், சிறப்பு காலண்டர் வெளியிடப்படுகிறது. இதன் விலை ஒவ்வொன்றும் ரூ.100 ஆகும்.

இந்த விழாவை முன்னிட்டு தொழில்மையம், மகளிர் திட்டம் மற்றும் பல்வேறு துறை சார்பில் 4 இடங்களில் கண்காட்சியும், கலை பண்பாட்டுத்துறை, தென்னக பண்பாட்டு மையம் சார்பில் 5 இடங்களில் கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. 

கும்பகோணம் வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில்  10 நாட்கள் தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. 

மேலும் கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சி, சொற்பொழிவுகளும் நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இதுவரை 6 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

4 வழிகள்

மகாமக குளத்திற்கு வரும் பக்தர்களுக்கு சிரமம் இல்லாமல் இருப்பதற்கு 4 வழிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்த 4 வழிகளும் குளக்கரை அருகே இரண்டு வழியாக ஒன்று சேர்கிறது. பக்தர்கள் குளத்தின் கிழக்கு கரையில் இருந்து இறங்கி மேற்கு நோக்கி செல்வார்கள்.
மேற்கு கரையில் 2 பிரிவாக பிரிந்து கோவிலுக்கு செல்லவும், ரெயில் நிலையத்திற்கு செல்லவும் வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே வழிகாட்டி பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக 16 லட்சம் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் அவர்கள் குப்பைகளை போட்டு வைத்துக் கொள்ளலாம். 

குளத்திற்கு வரும் பக்தர்கள் மற்ற நவக்கிரக தலங்களுக்கு செல்ல வேண்டுமானால் அதற்கு தனியாக பஸ்வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்காக 137 இடங்களில் மருத்துவ முகாமும் அமைக்கப் பட்டுள்ளது. 

இது தவிர 20 உயர் சிகிச்சை மையமும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. 23 ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இந்த ஆம்புலன்சுகள் சென்று வர தனி வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது. 

பெண்கள், முதியவர்கள் மகாமக குளக்கரை அருகே செல்ல மினி பஸ் வசதியும் செய்யப் பட்டுள்ளது. இதற்காக 100 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக தனி வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது. மகாமக விழாவுக்கு சுமார் 36 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. 

தமிழக அரசின் சாதனை திட்டங்களை விளக்கி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சி கும்பகோணம் நகர மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் 13-ந்தேதி முதல் 30 நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) ஜெயினுலாபுதீன், கணேசன், சரசுவதி மகால் நூலக தமிழ் பண்டிதர் மணி மாறன், அருங்காட்சியக காப்பாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

307 இடங்களில் குடிநீர் வசதி

மகாமக குளத்திற்கு நிமிடத்திற்கு 75 லிட்டர் தண்ணீர் உள்ளே வரும். குளத்திற்கு எந்த அளவிற்கு தண்ணீர் வருகிறதோ? அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படும். இது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெறும். 

மேலும் தண்ணீர் வரும் இடத்தில் ஆய்வாளர்கள் நின்று தொடர்ந்து கண்காணிப்பார்கள். தண்ணீரின் தன்மை குறித்தும் தொடர்ந்து பரிசோதனை செய்யப்படும்.
மேலும் கும்பகோணம் நகர், புறநகர் பகுதிகளில் பக்தர்களுக்காக 307 இடங்களில் கழிவறை வசதிகளும், 307 இடங்களில் குடிநீர் வசதிகளும் செய்யப் பட்டுள்ளன.

பக்தர்கள் சிறிது தூரம் நடந்து சென்றதும் இளைப்பாரும் வகையில் ஆங்காங்கே தற்காலிக அமரும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன என கலெக்டர் சுப்பையன் கூறினார்.

350 இடங்களில் கேமரா

கும்பகோணம் மகாமக விழாவை முன்னிட்டு கண்காணிப்பதற்காக 350 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், 20 இடங்களில் உயர் கோபுர கண்காணிப்பு கேமராக்ளும் பொருத்தப்பட்டுள்ளன.
மகாமக பாதுகாப்பு பணியில் 26 ஆயிரம் போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படைவீரர்கள் என 1,500 பேரும் ஈடுபடுத்தப் படுகின்றனர். மகாமக குளக்கரை பாதுகாப்பு பணிகள் எவ்வாறு மேற் கொள்ளப் பட்டுள்ளதோ? 

அதே போன்று பொற்றாமரைக்குளம், சக்கரா படித்துறை பகுதியிலும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என கலெக்டர் சுப்பையன் கூறினார்.
Privacy and cookie settings