தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக, இன்னும், 50 ஆண்டுகளில் மனிதன் செய்யும் அனைத்து வேலைகளையும், ரோபோக்கள் செய்யத் துவங்கி விடும், என,
அமெரிக்காவின், ரைஸ் பல்கலை விஞ்ஞானி மோஷே வார்டி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரபலமான ரைஸ் பல்கலையின், கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றும் மோஷே வார்டி,
இது குறித்து கூறியதாவது:
விஞ்ஞானம் அதி வேகமாக வளர்ந்து வரும் காரணத்தால், வரும், 2045ல், மனிதன் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும், ரோபோக்கள் செய்யத் துவங்கி விடும்.
மனிதர்கள் செய்யக்கூடிய வேலைகளை, ரோபோக்கள் செய்தால், பின், மனிதர்கள் என்ன செய்வர்? அமைதியாக ஓய்வெடுப்பரா? மனிதனால் வேலையற்று இருக்க முடியுமா?
ரோபோக்களால், உலகில், 30 சதவீதத்துக்கும் அதிகமானோர், அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.
மனிதன், வேலையின்றி, வெட்டியாக இருந்தால், பொருளாதாரம் என்னவாகும்?
வேலையற்று இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வகையில், சர்வதேச பொருளாதார சூழ்நிலை உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, மனித குலத்துக்கு நன்மை பயக்கக் கூடியதா என்பதை தெளிவாகக் கூற முடியவில்லை. இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் தான், நாம் உள்ளோம்.
அது மட்டுமல்ல; ரோபோக்களால் ஆன உலகத்தை, மனிதர்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.