திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நேரில் சந்தித்து மகனின் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றாக கூடுவது என்பது எப்போதாவதுதான் அரிதாக நடைபெறும்.
அதுவும் ஒரு கட்சியின் அலுவலகத்துக்கு மற்றொரு கட்சித் தலைவர் செல்வதெல்லாம் 'தேர்தலின்' போது மட்டுமே சகஜமாக நடைபெறும்.
அதுவும் மிகக் கடுமையான விமர்சித்து கொள்ளும் தலைவர்களின் சந்திப்புகள் பரபரப்பைத்தான் ஏற்படுத்தும்.
அண்மையில் கரகாட்டம் ஆடும் பெண்ணைப் போல இருக்கிறார் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என கிண்டலடித்திருந்தார் இளங்கோவன். இதற்கு தமிழிசையும் பதிலடி கொடுத்திருந்தார்.
சத்திய மூர்த்தி பவனில் தமிழிசை இந்நிலையில் இன்று திடீரென காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனுக்கு பாஜக கொடியுடன் ஒரு கார் நுழைய ஏகத்துக்கும் பரபரப்பாகி விட்டது.
அதுவும் வந்திறங்கியது தமிழிசை சவுந்தரராஜன் என்றதும் கதர் சட்டைக் காரர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
மகன் திருமணம்..
அவரை கோபண்ணா உள்ளிட்டோர் வரவேற்று இளங்கோவன் அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது தான் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க தமிழிசை வந்திருக்கிறார் என்பதை காங்கிரஸ் கட்சியினர் தெரிந்து கொண்டனர்.
காமராஜர் அரங்கத்தில்...
தமிழிசை சவுந்தரராஜன் மகன் டாக்டர் எஸ்.சுகநாதனுக்கும், கோயம்புத்தூரை டாக்டர் எஸ்.திவ்யாவுக்கும் சென்னையில் பிப்ரவரி 17-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணம் நடைபெறும் இடமும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் தான்.
கருணாநிதியுடனும் சந்திப்பு பின்னர் மாலையில் திமுக தலைவர் கருணாநிதியையும் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
அதுவும் திமுக- பாஜக இடையே கூட்டணி அமையும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் கருணாநிதி யுடனான தமிழிசையின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது,