முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப் பட்டதையடுத்து சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றிற்கு கட்டாய விடுமுறை அளிக்கப் பட்டதால் அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்தனர்.
சென்னை மாநகராட் சியின் 15 மண்டலங்களில் முதல்வர் பிறந்த நாள் விழாவை யொட்டி நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மாதவரம் மண்டலத்தில் 22 ஆவது வார்டு புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முகாம் நடத்தப் பட்டது. அதற்காக அந்த பள்ளிக்கு கட்டாய விடுமுறை விடப் பட்டது.
ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில் நீடித்த பலத்த மழையால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1 மாத விடுமுறையும், அதை யடுத்து பொங்கல் விடு முறையும் விடப் பட்டது.
ஆண்டுத் தேர்வுகள் நெருங்கிய நிலையில் வார விடுமுறை நாளான சனிக் கிழமை யன்று பள்ளிகள் செயல் படுத்தப் படுகின்றன.
இது தவிர அரசு பள்ளி வளாகங் களில் நடக்கும் அரசின் இலவச பொருட்கள் வழங்கும் பணி மற்றும் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கல் முகாம் ஆகிய வற்றால் பள்ளி மாணவ,
மாணவி யரின் கல்வி பாதிக்கப் படும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில் நேற்றைய மருத்துவ முகாமிற் காக புழல் நடுநிலைப் பள்ளிக்கும் கட்டாய விடுமுறை விடப் பட்டது.
மற்ற பகுதிகளில் பள்ளிகள் இயங்கும் நிலையில் இந்த பள்ளிக்கு மட்டும் எப்படி விடுமுறை விடப் பட்டது என பெற்றோர் குழம்பினர். முதல்வரின் மருத்துவ முகாமிற் காக விடுமுறை விடப் பட்டது.
மற்றொரு வார விடுமுறை நாளில் பள்ளி செயல்படும் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பள்ளிகல்வித் துறையிடம் அனுமதி பெற்று தான் பள்ளி வளாகம் பயன் படுத்தப் பட்டது என்றனர்.
பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி யிடம் விசாரித்த போது பதில் அளிக்க மறுத்து, “தொடக்க கல்வி அதிகாரிகளை கேளுங்கள்” என்று நழுவி விட்டார்.
தொடக்க கல்வி அதிகாரிகள் கூறுகையில், முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சி என்பதால் எங்களால் மறுக்க முடிய வில்லை என்றனர். இதனால் அனைத்து பெற்றோர் களும் அதிருப்தி அடைந்தனர்.