முதல் அமைச்சர் ஜெயலலிதா 68 வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள 282 அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கடந்த 4 ஆண்டுகளாக முதல்வர் பிறந்தநாளில் அம்மா உணவகத்தில் வழங்கப்படும்
உணவிற்கு ஆகும் செலவினை ஏற்றுக் கொண்டு பொது மக்களுக்கு இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கி வருகிறார்.
அதன்படி முதல் அமைச்சரின் பிறந்த நாளான இன்று சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
மேலும் காலை டிபன், மதிய உணவு, இரவு டிபன் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் சாப்பிடுவதற்காக புற நோயாளிகள்,
அவர்களது உதவியாளர்கள், ஆட்டோ மற்றும் கூலி தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று சாப்பிட்டனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் இலவச உணவு சாப்பிடுவதற்காக ஆர்வத்துடன் சென்றனர்.
அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல், சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை தரமாக வழங்கப்படுவதால் எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும்.
முதல்வர் பிறந்தநாளில் இலவசமாக வழங்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலை மோதியது.
அம்மா உணவகத்தில் தினமும் சுமார் 13 லட்சம் பேர் உணவு அருந்துகிறார்கள். இன்றும் அதே அளவில் பயன் அடைந்தனர்.
இது போல ஒவ்வொரு வார்டு அருகில் செயல்படும் அம்மா உணவகங்களிலும் மக்கள் விரும்பி சாப்பிட்டனர்.