ஆயிரக் கணக்கான ஆண்டுகளை கடந்தும் இன்றைக்கும் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை கொண்டதாக இருக்கிறது உலகப் பொது மறையான திருக்குறள்.
அரிசியில் திருக்குறள், மனப்பாடமாக ஒப்புவித்தல் என திருக்குறளை கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தப் பட்டு விட்டன.
அந்த வரிசையில், திருக்குறளை 24 மணி நேரத்தில், ஒன்று விடாமல் அத்தனை குறளையும் தலைகீழாக எழுதி சாதனை படைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த இளம்பெண்.
இதென்ன மொழி என பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது கோவை, ஆலந்துறையைச் சேர்ந்த ஹரிப்பிரியாவின் எழுத்துகள்.
இவர் எழுதுவது தமிழ் மொழி தான். ஆனால் கண்ணாடி பிம்பமாய் தமிழ் வார்த்தைகளை எழுதும் வல்லமை கொண்டிருக்கிறார் ஹரிப்பிரியா.
1330 திருக்குறள் களையும் 24 மணி நேரத்தில் தலைகீழாய் எழுதியுள்ளார். திருவள்ளுவரின் ஓவியத்திலும் அத்தனை குறள்களையும் தலைகீழாய் வடித்துள்ளார்.
தமிழ் எழுத்தை நேராக எழுதவே பலரும் படாத பாடுபடும் நிலையில், கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட ஹரிப்பிரியா, திருக்குறளை தலைகீழாய் எழுதுவதோடு அதில் சாதனையையும் நிகழ்த்தி யுள்ளார்.
இன்றைய இளம் தலைமுறை யினரிடம் திருக்குறள் குறித்து ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி தான் இந்த சாதனை என்கிறார் ஹரிப்பிரியா.
சிறு வயதில் இருந்தே தலைகீழாக எழுதும் ஆர்வத்தை கொண்டிருந்தாக கூறும் ஹரிப்பிரியா, கணித எண்கள், தமிழ், ஆங்கில வார்த்தைகளை முதலில் தலைகீழாக எழுதி பார்த்தவர்,
அரிசியில் நுண்ணெழுத்து களால் எழுதுவது, திருக்குறளை தலைகீழாக எழுதுவது, திருக்குறளின் கண்ணாடி பிம்பத்தில்
திருவள்ளுவர் படத்தை வரைவது என இடை விடாத முயற்சிகள் தான் இந்த சாதனைக்கான காரணம் என்கிறார் இவரது தாயார் லதா.
தலைகீழாக எழுதுவது என்பது நிச்சயம் சாதாரணமானது அல்ல. இடைவிடாத முயற்சியாலும், நீண்ட பயிற்சியாலும் தான் இது சாத்தியமாகி இருக்கிறது.
இன்றைக்கும் மிக அவசியமான திருக்குறளை நேசித்து, அதனைப் புதுவிதமாய் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது என்றே சொல்லலாம்.