கலாபவன் மணி மரணம்....நடிகர் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை !

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் நீடிப்பதையடுத்து, அதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை தனது ஆரம்பக்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது. 


நுரையீரல் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த கலாபவன் மணி, சனிக்கிழமையன்று கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் அவருடைய வீட்டில் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பிறகு கொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நிம்மி என்கிற மனைவியும் ஸ்ரீலட்சுமி என்கிற மகளும் உள்ளார்கள். 

கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அதனை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

கே. சுதர்சன் டி.எஸ்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை நேற்று இரவு கலாபவன் மணியின் சாலக்குடி இல்லத்தில் தீவிர விசாரணை செய்தது. அந்த இல்லத்தில்தான் கலாபவன் மணி, சுயநினைவு இன்றி கிடந்தார். 

பிறகு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். நேற்று அந்த இல்லத்தில் கலாபவன் மணியுடன் தங்கியிருந்த ஒரு நடிகர் உள்ளிட்ட 5 நபர்களை காவல்துறை விசாரித்துள்ளது. 

கள்ளச்சாராயத்தில் உள்ள மெத்தனால் என்ற நச்சுத்தன்மையுள்ள அமிலம் அவருடைய உடலில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறப்படுகின்றன. இதனால், உடற்கூறு ஆய்வுக்காக கலாபவன் மணியின் உடல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. 

திருச்சூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு இன்று காலை நடத்தி முடிக்கப்பட்டது. இதனையடுத்து, சாலக்குடியில் உள்ள கலாபவனின் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் கலபாவன் மணி மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டுவரப்படும்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Tags:
Privacy and cookie settings