தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இதுவரை சுமார் ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பால் முடக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த கன மழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வரை ஒதுக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று வரை 59.62 கோடிக்கு தமிழகம் மற்றும் பிற மாநில எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழக தேர்தல் தேதி அறிவிப்பால் இந்த நிதியை தற்போது செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா ‘தி இந்து’விடம் கூறும்போது, “எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வெள்ள நிவாரணப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்தால்
அதை செய்து முடிக்க தடையில்லை. இன்னும் தொடங்கப்படவில்லை எனில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அதற்கு தடை ஏற்படும்” என்றார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “மாநிலங்களவை எம்.பி.க்களின் தொகைக்கு அதன் குழு உடனடியாக ஒப்புதல் கொடுத்து விட்டது. ஆனால், மக்களவை குழு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.
அதிமுக எம்.பி.க்கள் தங்கள் ஒப்புதலை எங்களுக்கு அனுப்பா மல் நேரடியாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு அனுப்பி விட்டனர்.
இதை அறியாமல் நாங்கள் அவர்கள் தொகைக்காகக் காத்திருக்க நேரிட்டது. இன்னும் சில நாட்களில் சுமார் ரூ. 60 கோடியை நோடல் ஏஜன்சிக்கு மாற்றி விடுவோம்.
இத் தொகையை உடனே செலவிட்டால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமையுமா என்பதை அந்த துறைதான் முடிவு செய்ய வேண்டும்” என்றனர். தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மக்களவை எம்.பி.க்கள் 44 பேரும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 26 பேரும் நிதி ஒதுக்கியுள்ளனர்.
மக்களவையில் அதிமுகவின் 38 எம்.பி.க்கள், பாமக எம்.பி. அன்புமணி ஆகியோர் தலா ரூ.1 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மற்றொரு எம்.பி.யும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
எனிலும் பாஜக எம்.பி.க்களில் வடக்கு மும்பை எம்.பி. கோபால் ஷெட்டி ரூ.10 லட்சம், தெற்கு கோவா எம்.பி. நரேந்திர சன்வால்கர் ரூ.5 லட்சம், ஒடிசாவின் சுந்தர்கர் எம்.பி. ஜுவல் ஓரம் ரூ.20 லட்சம் அளித்துள்ளனர்.
மேகாலயாவின் துரா எம்.பி.யும் நேற்று முன்தினம் மறைந்தவருமான பி.ஏ.சங்மா ரூ.10 லட்சம், தேசியவாத காங்கிரஸின் புனே எம்.பி. சுப்ரியா சுலே ரூ.10 லட்சம், மேற்கு வங்கத்தின் நியமன எம்.பி. ஜார்ஜ் பேக்கர் ரூ.50 லட்சம் அளித்துள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினர் களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி யின் அனைத்து அதிமுக உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், நியமன உறுப்பினர் கே.பராசரன் ஆகியோர் தலா ரூ.1 கோடி அளித்துள்ளனர்.
திமுக உறுப்பினர்களில் கனிமொழி மட்டும் ரூ.50 லட்சம் அளித்துள்ளார். பாஜகவில் ஹரியாணா எம்.பி. விரேந்தர் சிங் ரூ.10 லட்சம், உ.பி. எம்.பி.யான மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் ரூ.50 லட்சம் அளித்துள்ளனர்.
பிஜு ஜனதா தளத்தின் ஒடிசா எம்.பி. அனுபவ் மொஹந்தி ரூ.25 லட்சம். ஐக்கிய ஜனதா தளத்தின் பிஹார் எம்.பி. மகேந்திர பிரசாத், கேரள எம்.பி.க்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் சி.பி.நாராயண் ரூ.50 லட்சம், காங்கிரஸின் பி.ஜே.குரியன்,
ஏ.கே.அந்தோனி ஆகியோர் தலா ரூ.1 கோடியும் அளித்துள்ளனர். நியமன உறுப்பினர்களில் இந்தி நடிகை ரேகா ரூ.1 கோடியும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சமும் அளித்துள்ளனர்.
காங்கிரஸ் உறுப்பினர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்களான டெல்லியின் ஜனார்தன் துவேதி, ஹரியாணாவின் குமாரி ஷெல்ஜா, கர்நாடகத்தின் கே.ரகுமான்கான் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் அளித்துள்ளனர்.