முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்,
நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி
ஆகியோர் தங்களை விடுதலை செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியிருந்தனர்.
தமிழ்நாடு அரசு தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர்கள் ஏழுபேரும் ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர். இந்தநிலையில் சிறையில் உள்ள ஏழு பேரின் கோரிக்கைகளை ஏற்று அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
இவர்களை விடுவிப்பது தொடர்பாக, மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.