பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்தும் வகையில், வீடு இல்லாதவர்களுக்கு அடைக்கலம், சுகாதாரப் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி
உள்ளிட்டவற்றை அளிப்பதற்கான சமூக நலத் திட்டங்களை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய சமூக நலத் துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. இதன்படி, நிதி ஆதாரமின்றி வறுமையில் உள்ள மக்களுக்கு உணவு,
அடைக்கலம், சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதுடன், மறுவாழ்வுக்கான ஆலோசனைகளையும் வழங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
குறிப்பாக, உடல் வலிமையுடன் உள்ள நபர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து, அவர்களையும் சமூகத்தோடு இணைந்து கெளரவாக வாழ வழி வகுப்பது என அந்த அமைச்சகம் உத்தேசித்துள்ளது.
பிச்சைத் தொழிலும், வறுமையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையும், குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் பிச்சைத் தொழிலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது
என்பதையும் கணக்கில் கொண்டு மேற்கண்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
மேலும், இந்தத் திட்டங்களை அமல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், பயனாளிகள் குறித்த விவரங்களை கணினிகளில் சேகரித்து வைக்கவும்.
அந்த விவரங்களை ஆதார் எண்களோடு இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புள்ளி விவரம்: கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நாடெங்கிலும் பிச்சைக் காரர்களாகவும், வறுமை நிலையில் இருப்பவர்களாகவும் 4.13 லட்சம் பேர் உள்ளனர் என கணக்கிடப்பட்டது.
இதில், 3.72 லட்சம் எந்த வேலையும் இல்லாதவர்கள் என்றும், 41,400 பேர் மிக மிகக் குறைவான கூலி பெற்று பணிபுரிபவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.