மேற்கவங்க மாநிலத்துக்கு 6 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடக்கும் 5-வது கட்ட தேர்தலில்
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
கடந்த தேர்தலின் போது இந்த தொகுதியில் போட்டியிட்ட மம்தா 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை களம் இறக்குவது குறித்து காங்கிரஸ் தீவிரமாக ஆலோசித்து வந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் பேராசிரியர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா வின் பெயர் வலுவாக அடிபட் டதால், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாகவே மம்தாவுக்கு எதிராக அவர் பவானிபூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிய ரஞ்சன் தாஸின் மனைவியும், முன்னாள் எம்பியுமான தீபா தாஸ் முன்ஷியை அந்த தொகுதியின் வேட்பாளராக நிறுத்த சோனியா முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து தீபா முன்ஷியின் பெயர் சேர்க்கப்பட்டு பவானிபூர் உள்பட 42 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள தீபா முன்ஷி, ‘‘இது சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல; போர். எனக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர் மிகுந்த செல்வாக்கானவர், அறிவுகூர்மையுடையவர்.
ஆனால், அவரது ஆட்சியில் இம்மாநிலம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது. அதை மாற்ற, இந்த தேர்தலில் நான் நிச்சயம் வெற்றி பெற பாடுபடுவேன்’’ என்றார்.
ஏற்கெனவே பாஜக சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளுப் பேரன் சந்திர போஸ் பவானிபூர் தொகுதியில் களமிறக்கிவிடப்பட்டுள்ளார்.