புத்தகத்தின் பக்கங்கள் படிக்க மட்டும் தான் பயன்படுமா என்ன? சில நேரங்களில் குடிக்கவும் பயன்படும் என்று நிரூபித்திருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரான தெரசா.
இவர் கண்டுபிடித்துள்ள புத்தகம் மூலம் தண்ணீரை வடிகட்ட முடியும். உலகில் 663 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,
இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாக, உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்குச் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க இருக்கிறது.
இந்த புத்தகத்தைத் திறந்து ஒரு தாளை எடுத்து, அதன் மீது தண்ணீரை ஊற்றினால், மிக சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் 99 சதவிகித பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு விடுகின்றன.
கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளரான தெரசா டான்கோவிச் என்பவரின் கடின உழைப்பில் தான் தண்ணீரைச் சுத்தப் படுத்தும் இந்தப் புத்தகம் உருவாகி யிருக்கிறது.
மிகச் சிறிய வெள்ளி, மற்றும் செம்புத் துகள்களால் இந்த புத்தகத்தின் பக்கங்கள் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றின் வழியாக நீர் செல்லும் போது, பாக்டீரியாக்கள் கொல்லப் படுகின்றன.
இந்த ஒரு புத்தகம் ஒரு மனிதரின் தண்ணீர்த் தேவையை 4 ஆண்டுகளுக்கு தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தது.
விரைவில் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் இந்த புத்தகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.