அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் முதல்வர் ஜெயலலிதாவே நேற்று திடீர் நேர்காணல் நடத்தினார்.
இந்த நேர்காணலின்போது அதிமுகவில் சக்தி வாய்ந்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட ஐவர் அணியை ஜெயலலிதா ஓரங்கட்டினார்.
அவர்களுக்கு பதில் கட்சியில் சாதாரண பொறுப்பில் இருக்கும் தமிழ்மகன் உசேன், மதுசூதனன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் நேர்காணலின் போது பங்கேற்றனர். இந்த புதிய மாற்றம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் எதிரொலியாக கட்சி மற்றும் அமைச்சர் பதவியில் இருந்தும் ஓபிஎஸ் அணியினர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் பல்வேறு கட்சிகள் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. திமுக, காங்கிரஸ், தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் நேர்காணலை ஏறக்குறைய முடித்துவிட்டன.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை விருப்பமனுக்கள் வாங்கப்பட்டன. மொத்தம் 26,174 பேர் வேட்பு மனுக்களை அளித்தனர்.
தமிழகத்தில் மட்டும் போட்டியிட 17,698 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அது மட்டுமல்லாமல் முதல்வர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று 7,936 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதிமுகவை பொறுத்தவரை விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் குறித்து உளவுத் துறை, மாவட்ட செயலாளர்கள் மூலம் வேட்பாளர் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். பின்னர், அமாவாசை அல்லது முகூர்த்த நாளில் திடீரென அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஆனால், இந்தமுறை அதிமுகவில் நேர்காணல் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நேர்காணலையும் ஜெயலலிதாவே நேரடியாக நடத்தியது அதிமுக விஐபிக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு சீட் பெற்று தருவதாக உளவுத் துறை
மற்றும் பல்வேறு புகார் கடிதங்கள் மேலிட கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் ஜவர் அணியினரை ஒதுக்கி நேற்று அதிமுகவில் நேர்காணல் நடந்தது.
போயஸ் கார்டனுக்கு வந்த அதிமுவினர்: விருப்பமனு தாக்கல் செய்தவர்களில் குறிப்பிட்ட சிலரிடம், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று திடீரென போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து நேர்காணலை நடத்தினார்.
அவர்கள் உளவுத் துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் மாவட்ட செயலாளர்கள் கொடுத்த பட்டியலுடன் உளவுத் துறை பட்டியல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டே விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் அழைக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
மற்றவர்களின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் கொடுத்தவர்களை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக அறிக்கை: நேர்காணல் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் மே 16ம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு செய்திருந்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது” என்று கூறப்பட்டுள்ளது.
பங்கேற்றவர்கள் யார்? நேற்று நடைபெற்ற நேர்காணலில் சென்னை மாநகராட்சி துணை மேயர் பெஞ்சமின், கவுன்சிலர் நூர்ஜகான், ஆர்.கே. நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்,
ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் உள்ளிட்ட 5 பேர் கலந்து கொண்டனர். மேலும், நேர்காணலில் பங்கேற்றவர்களே வேட்பாளராக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர். தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக அந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவரும் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்.
இதனால் அவர் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது வேறு தொகுதியில் போட்டியிடுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் ேபாட்டியிட வாய்ப்புள்ளது.
ஒரு வேளை ெஜயலலிதா அந்த தொகுதியில் போட்டியிடாத பட்சத்தில் வெற்றிவேலுக்கு மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஜெயலலிதாவே நேரடியாக வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது பணம் வாங்கி சீட் தருவதாக கூறிய அமைச்சர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணலில் பங்கேற்றவர்களே வேட்பாளராக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஐவர் அணி: அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியாக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் அடங்கிய ஐவர் அணி தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த அணியினர்தான் கட்சியை வழிநடத்துவது, கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை குறித்து விசாரித்து ஜெயலலிதாவுக்கு அறிக்கை அனுப்புவது என்று செய்து கொண்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் இவர்கள்தான் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, முதல்வருக்கு அடுத்தப்படியாக இவர்கள் கட்சியில் வலம் வந்தனர்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் சட்டசபை தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி நிறைய பேரிடம் வசூல் வேட்டையில் இறங்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்த உளவுத்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடத்திய உளவுத்துறையினர் முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதில் ஐவர் அணியை சேர்ந்தவர்கள் ஏகப்பட்ட நபர்களிடம் சீட் பெற்றுத்தருவதாக பணத்தை வாங்கியிருக்கும் தகவல் ஜெயலலதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார்.
களையெடுப்பு ஆரம்பம்
ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் உள்பட் அந்த அமைச்சர்களின் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டது. அண்மையில் கூட சின்னையா, விஜயபாஸ்கரின் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது. நேற்றும் சிவகாசி மற்றும் வடசென்னையில் பல்ேவறு நிர்வாகிகளை ஜெயலலிதா ஒரே நாளில் மாற்றினார்.
குறிப்பாக வெற்றிவேல் நேர்காணல் முடித்துவிட்டு வந்த நிலையில் இந்த பட்டியலும் வெளியானது. மேலும், இந்த அமைச்சர்கள் சார்ந்த மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஐவர் அணியினரும் விரைவில் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.