மூன்று மாதங்களேயான தனது பெண் சிசுவை, தாயொருவர் வீட்டின் சுவரில் அடித்து படுகொலை செய்த சம்பமொன்று கிளிநொச்சி,
திருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம் பெற்றுள்ளது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த நரேஸ்குமார் மதுசாளினி என்ற பெயரைக் கொண்ட சிசுவே இவ்வாறு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
சிசு, தொடர்ந்து அழுது கொண்டிருந்தமையால், அழுகையை நிறுத்த முடியாத கோபத்தில் தாய், அச்சிசுவை சுவரில் அடித்துள்ளார் என்று அறிய முடிகின்றது.
படுகாயங்களுக்குள்ளான சிசு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. அதனை கண்ட தாயும் மயங்கி விழுந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பொலிஸார், ஸ்தலத்துக்கு விரைந்து சிசுவின் சடலத்தை மீட்டு, கிளிநொச்சி மாவட்டப்
பொது வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மயங்கிக் கிடந்த தாயையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கிளிநொச்சியிலுள்ள திணைக்களம் ஒன்றில் பணியாற்றி வரும் மேற்படி பெண், நீண்ட காலமாக பிள்ளைப்பேறு இல்லாமல், இருந்துள்ள நிலையிலேயே அவருக்கு
இக்குழந்தை 2015-ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29-ஆம் திகதியன்று பிறந்திருந்தது என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை 12.30 மணியளவில் உள்நுழைந்த திருடர்கள்,
வீட்டிலிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெல்லிப்பளை போலிஸார் தெரிவித்தனர்.
முகங்களை கறுப்புத் துணியால் மூடியபடி கத்திகள், பொல்லுகள் சகிதம் வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று, வீட்டிலிருந்தவர்களை மிரட்டி,
அங்கிருந்த 2.18 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 பவுண் நகை மற்றும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
மேற்படி வீட்டில் கணவன், மனைவி மற்றும் 3 பிள்ளைகள் வசித்து வருவதாகவும் கணவன் சம்பவ தினத்தில் கொழும்புக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வன்னேரிக்குளம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களில் கிளிநொச்சி பொலிஸார்
இன்று திங்கட்கிழமை (14) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
மேற்படி இரு கிராமங்களிலும் மணல் கடத்தல் இடம் பெறுகின்றது என பொலிஸாருக்கு நீண்டகாலமாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.
Tags: