தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தில்
கோவை வேளாண் பல்கலைக்கழக பஸ் எரிக்கப்பட்டதில் 3 மாணவிகள் கருகி பலியானார்கள். இந்த வழக்கில் முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதனை சென்னை உயர் நீதிமன்றமும்,
உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மறுசீராய்வு மனுக்கள் மீது 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்ற உத்தரவின் அடிப்படையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், மறு சீராய்வு மனு மீது தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் முனியப்பன், ரவீந்திரன் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளது.
கொலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் பேருந்து எரிக்கப்படவில்லை எனவும்,உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறு என்பதால் தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.