விசாரணை' படத்துக்கான தேசிய விருதை என் குருநாதர் கே.பாலசந்தர் சாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்தார். 63 வது தேசிய விருதுகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது.
சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது இயக்குநர் சமுத்திரக் கனிக்கு கிடைத்தது. இந்த விருது குறித்து இயக்குநர் சமுத்திரக் கனியிடம் கேட்ட போது, இறைவனுக்கும் நண்பன் வெற்றி மாறனுக்கும் நன்றி.
இப்படத்துக்காக கடின உழைப்பு. என் குருநாதர் உனக்கு தேசிய அளவில் அங்கீகாரம் வரும் என்று அடிக்கடி சொல்வார். பாலசந்தர் ஐயா இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார்.
இந்த விருதை என் குருநாதருக்கு சமர்ப்பிக்கிறேன். எடிட்டர் கிஷோருக்கு விருது கிடைத்தது தான் மிகவும் மகிழ்ச்சி. கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.
நடிகர் தினேஷ், கிஷோர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே கஷ்டப்பட்டு நடித்திருந்தார்கள். இப்படத்துக்காக உண்மையாக உறுதியாக உழைத்த எல்லாருக்குமே விருது கிடைத்திருக்க வேண்டும்.
ரொம்ப இஷ்டப்பட்டு கடினமான பாதைகளை கடந்து வந்தோம். இந்த விருதில் அனைவருக்குமே பங்கு இருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.