மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு இறுதி வாதத்தை முன்வைக்க அனுமதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வலியுறுத்தினார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) விடுதலை செய்தார். இதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இம்மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இன்றைய விசாரணையின் போது கர்நாடகா அரசின் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தமது இறுதிவாதத்தை நாளை காலையில் 1 மணிநேரத்துக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதேபோல் இவ்வழக்கின் தொடக்க மனுதாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமியும் தம்முடைய வாதத்தை நாளை 1 மணிநேரத்துக்குள் முடித்துக் கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், க. அன்பழகன் தரப்புக்கு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யும் உரிமை கிடையாது; ஆகையால் அன்பழகன் தரப்பு இறுதிவாதத்தை முன்வைக்க அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார்.