தலப்பாகட்டி பிரியாணி கடையின் மனிதநேயம் நெகிழும் தொழிலாளி !

ஜனவரி 19-ம் தேதி காரப்பாக்கம், தலப்பாகட்டி பிரியாணி கடையில் நடந்த கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு பணியின்போது நான்கு பேர் பலியான சம்பவத்தை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது. 
இதில், உயிர் பிழைத்த ஒரே நபர் விஜயகுமார் என்ற தொழிலாளிதான். எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போய்ப் படுத்த படுக்கையாக இருக்கும் விஜயகுமாரை நேரில் சந்தித்து உதவிக்கரம் நீட்டியுள்ளது தலப்பாகட்டி நிர்வாகம்.

நுரையீரலில் ஓட்டை விழுந்து, மூச்சு விடுவதற்குக்கூட சிரமப்பட்ட நிலையில் படுக்கையில் கிடக்கிறார் விஜயகுமார். தலப்பாகட்டி பிரியாணி கடையில் நடந்த சம்பவம், அவரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.

சென்னை, கண்ணகி நகர் குடியிருப்பில் வசித்து வரும் விஜயகுமாரை சந்திக்கச் சென்றேன். ஏற்கனவே, நடந்த ஒரு விபத்தில் கைவிரல் அனைத்தையும் இழந்த மாற்றுத் திறனாளி இவர். கட்டிலில் படுத்துக் கொண்டே நம்மை வரவேற்றார்.

" என் மனைவி அடையாறுல ஒரு வீட்டுல வேலைக்குப் போயிட்டு இருந்தா. என்னால நடக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னதும், என்னை கவனிச்சிட்டு இருக்கா. ஒரு பையன். ஒரு புள்ளை. 

ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்காங்க. எல்.பி ரோடு பக்கத்துல இருக்கற மரக் கடையில வேலை பார்த்துட்டு இருந்தேன். திடீர்னு ஒருநாள் மரம் அறுக்கும்போது என் வலது கைவிரல் நாலும் மிஷின்ல சிக்கிடுச்சு. 

கை மூளியாப் போச்சு. அப்புறம் என்னைக் காதலிச்ச அம்முவைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். எதாவது வேலை செஞ்சு பொழைச்சே ஆக வேண்டிய கட்டாயம். மெட்ரோ வாட்டர் போர்டு கழிவுநீர் சுத்தம் பண்ற லாரியில கிளீனரா வேலைக்குப் போயிட்டு இருந்தேன். 

சாக்கடைக்குள்ள இறங்கி சுத்தம் பண்றதுதான் முழு நேர வேலை. ஒருநாளைக்கு 300 ரூபாய் கிடைக்கும். அடிக்கடி, தனியார் ஓட்டல், ஆஸ்பத்திரியில இருக்கற செப்டிக் டேங்குகளை கிளீன் பண்ற வேலைக்குப் போவேன்.

அப்படித்தான், என்னோட வேலை பார்த்த குமார், அவர் அண்ணன் சரவணன், முருகன்னு மூணு பேரும் தலப்பாகட்டி ஓட்டல் செப்டிக் டேங்க்கை கிளீன் பண்ணக் கூட்டிட்டுப் போனாங்க. 

அந்த செப்டிக் டேங்க் பதினைந்து அடி நீளம், பத்து அடி ஆழத்துல இருந்துச்சு. ஒரே ஒரு மேன் ஹோல்தான் இருந்துச்சு. வேற பாதையே இல்லை. சரியான இருட்டு. 

டேங்க்ல இருந்த பத்தாயிரம் லிட்டர் கழிவுத்தண்ணியை லாரியில நிரப்பி அனுப்பினோம். ஒரு கையால கயித்தைப் பிடிச்சு தொங்கிட்டே ரெண்டு காலாலயும் செப்டிக் டேங்க் சுவத்தை சுத்தம் பண்ணிட்டு இருந்தேன். 

அதுக்குள்ள கயிறு கட்டிட்டு சரவணனும், குமாரும், முருகனும் உள்ள இறங்கிட்டாங்க. சாக்கடைத் தண்ணியை காலால கிளறிட்டே இருந்தாங்க. உள்ள இருந்து முட்டை வடிவத்துல இருந்து கேஸ் வெடிக்க ஆரம்பிச்சது. நாத்தம் தாங்க முடியாம உள்ள விழுந்துட்டேன்.

அஞ்சு நாள் கழிச்சுத்தான் முழிச்சுப் பார்த்தேன். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில வச்சிருந்தாங்க. இனிமேல் ஏதாவது வெயிட்டான பொருளைத் தூக்குனா ஆயுசு அவ்வளவுதான்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. 

அதே இடத்துல என்னோட வந்த நாலு பேரும் உள்ள விழுந்து செத்துப் போயிட்டாங்கன்னு தகவல் சொன்னாங்க. அவங்க குடும்பத்துக்கு பத்து லட்ச ரூபாயை தலப்பாகட்டிகாரங்க கொடுத்தாங்க. 

எனக்கு எதாவது உதவி செய்தால் நல்லாயிருக்கும்னு விகடன்ல சொன்னேன். அதுல வந்த செய்தியைப் பார்த்துட்டு தலப்பாகட்டி ஓனர் என்னைப் பார்க்க வந்தார் " எனச் சொல்ல,

அடுத்துப் பேசினார் அவரது மனைவி அம்மு, " எங்களுக்கு ரேஷன் கார்டுகூட இல்லை. சோத்துக்குக் கஷ்டப்படறோம்னு விகடன்ல செய்தி வந்த மறுநாள் ஓட்டல்காரங்க வந்தாங்க. ' உங்க குடும்பத்துக்கு இப்படியொரு நிலை வந்திருக்குன்னு செய்தியைப் பார்த்துத்தான் தெரிஞ்சுகிட்டோம். 

எங்ககிட்ட வந்து சொல்லியிருந்தா, கண்டிப்பாக உதவி செஞ்சிருப்போம்'னு சொல்லிட்டு, என் பொண்ணு, பையன் பேர்ல ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட்டும்,

என் பேர்ல அம்பதாயிரத்துக்கு டெபாசிட்டும் பண்ணிட்டு பத்திரத்தைக் கொடுத்தாங்க. இப்படி திடீர்னு வந்து உதவி பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. எங்க தலையெழுத்து இவ்வளவுதான்னு அழுதுட்டு இருந்தோம். 

தனியார் முதலாளிகள்னா, எதுவும் பண்ண மாட்டாங்கன்னு தப்பா நினைச்சுட்டோம். அவ்வளவு அணுசரனையாக பேசினாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

ஊரெல்லாம் கடை பரப்பி பிரியாணி வாசத்தை மணக்கச் செய்யும் தலப்பாகட்டி நிர்வாகம், ஒரு தொழிலாளியின் வாழ்விலும் வசந்தத்தைப் பரப்பியதை வரவேற்போம்.
Tags:
Privacy and cookie settings