அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைவதாகக் கூறிய சரத்குமார், முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால், நடிகர் சங்கத் தேர்தலின்போது தனக்கு அதிமுக ஆதரவு அளிக்காததால் சரத்குமார் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், தமிழகம் வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இடம்பெறும் என்று சரத்குமார் அறிவித்திருந்தார்.
மேலும், சமத்துவ மக்கள் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்த எர்ணாவூர் நாராயணன் சமத்துவ மக்கள் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, அதிமுகவுக்கு ஆதரவு என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், புதிய திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்திக்க போயஸ்கார்டன் இல்லத்துக்கு சரத்குமார் சென்றுள்ளார்.