வீட்டில் இந்திய தேசிய கொடியேற்றிய பாகிஸ்தானை சேர்ந்த இளைஞரை அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மீதான அபிமானத்தால்,
அந்த நபர் இந்திய கொடியை ஏற்றியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு அடிப்படையில் பார்த்தால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணம், ஓகாரா மாவட்டத்தை சேர்ந்த உமர் தராஸ் என்ற இளைஞரின் வீட்டுக்கு மேல் இந்திய தேசிய கொடி பறப்பதாக அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டில் சோதனை நடத்திய இந்திய கொடியை பறிமுதல் செய்ததோடு, உமரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது அபிமான ஆட்டக்காரர் என்றும்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்து ரசித்து, இந்திய கொடியை பறக்கவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
உமர் வீட்டில் இருந்து பெரிய சைசிலான விராட் கோஹ்லி போஸ்டரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதால், அவர் கூறியது உண்மையாக இருக்கும் என காவல்துறை கருதுகிறது.
ஆனால், அவர் மீது பாகிஸ்தான் சட்டப்பிரிவு 123-ஏ-கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தேசத்துக்கு எதிரான செயல்களுக்கான வழக்குப்பிரிவு.
இதன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 வருட சிறை தண்டனை கிடைக்கும். அபராதமும் விதிக்கப்படலாம்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட உமருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தன்னை ஒரு உளவாளியாக பார்க்க கூடாது என்றும், கோஹ்லி ரசிகராக பார்க்க வேண்டும் என்றும் நிருபர்களிடம் உமர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.