இரண்டு வயதான சிறுமியொருத்தி தனக்கு காற்சட்டை அணிந்து கொள்ள முடியாமல் இருப்பதாகக் கூறி அவசர சேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.
இந்த அழைப்பையடுத்து சிறுமிக்கு உதவுவதற்காக போலிஸார் அச் சிறுமியின் வீட்டுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
தென் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த அய்லியா எனும் சிறுமியே அமெரிக்க அவசர சேவைப் பிரிவு இலக்கமான 911 இற்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
அவ்வேளையில், இச் சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றிருந்தார். அவ் வீட்டில் சிறுமியின் தாத்தா இருந்தார்.
எனினும், தானே சுயமாக செயற்படத் தீர்மானித்த அய்லியா அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பு விடுத்தாள்.
அநாவசிய அழைப்புகளால் அவசரசேவைப் பிரிவினர் சிரமங்களை எதிர் நோக்குவதாக முறைப்பாடுகள் உள்ளன.
ஆனால், மேற்படி அழைப்பையடுத்து அச்சிறுமியின் வீட்டுக்குச் செல்ல போலிஸ் உத்தியோகத்தர் மார்த்தா லோஹ்னஸ் தீர்மானித்தார்.
அவ் வீட்டுக்கு போலிஸ் உத்தியோகத்தர் வருவதைக் கண்டு அய்லியாவின் தாத்தா வியப்படைந்தாராம். தனது பேத்தி செய்த விடயம் எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
ஆனால், அச் சிறுமியோ போலிஸாரை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவள் மார்த்தா லோஹ்னஸை வரவேற்றாள்.
பின்னர், அய்லியா காற்சட்டை அணிந்து கொள்வதற்கு மார்த்தா லோஹ்னஸ் உதவியதுடன் சப்பாத்தும் அணிவித்து விட்டாராம்.