நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணம் புதன்கிழமை (மார்ச் 9) நிகழவுள்ளது. வானவியல் அற்புத நிகழ்வான இதனை இந்தியாவில் சென்னை, கன்னியாகுமரி,
கொல்கத்தா உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் பகுதி அளவு பார்க்கலாம் என்று வானவியல் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி அதிகாலை 4 மணி 49 நிமிடங்களுக்கு தொடங்கிய சூரிய கிரகணம் இந்தோனேசியா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு இடையே தென்பட்டது.
இந்தியாவில் பகுதி அளவாகத் தெரியும் சூரிய கிரகணத்தை பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளிலும், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் முழுமையாகக் காண முடிந்தது.
சென்னையில் மேகமூட்டம் அதிகம் இருந்ததால் சூரிய கிரகணம் முழுமையாக தென்படவில்லை. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வான சூரிய கிரகணம் சென்னையில் பகுதி நேர சூரிய கிரகணமாக தெரியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருத்தது.
இந்நிலையில் 6.22 மணிக்கு சென்னையில் பகுதிநேர சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது.
சென்னை பெசன்ட்நகர் எலியாட்ஸ் கடற்கரையில் இந்த பகுதி நேர சூரிய கிரகணத்தை காண பிர்லா கோளரங்கம் சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் வானத்தில் மேகமூட்டம் அதிகம் இருந்ததால் இந்த சூரிய கிரகணத்தை பார்வையாளர்களால் முழுமையாக கண்டு ரசிக்க முடியவில்லை.