கேரளாவில் அழகான குழந்தையை வைத்திருந்ததால், பெற்ற தாயை சந்தேகப்பட்டு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று பின்னர் விடுவித்துள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டம் நாதபுரம் நல்லாச்சி டவுண் பகுதியில், பெண் ஒருவர் 4 மாத கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். கிழிந்த சேலையுடன் அலங்கோலமான கோலத்துடன்,அந்த பெண் இருந்தார்.
ஆனால் அவர் கையில் வைத்திருந்த குழந்தை சிவப்பு நிறத்துடன் நல்ல துணிகள் உடுத்தப்பட்டு உறங்கிக் கொண்டிருந்தது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த பெண் குழந்தையை கடத்தி வந்திருப்பதாக கருதி, அவரிடம் விசாரித்தனர். குழந்தை உன்னுடையதா? என்ற கேள்விக்கு அந்த பெண்ணால் பதில் அளிக்க முடியவில்லை. ராஜஸ்தானை சேர்ந்த அந்த பெண்ணுக்கு மலையாளமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தான் பெற்ற குழந்தைதான் என்பதையும் நிரூபிக்க வழி தெரியாமல் அந்த பெண் கதறினார். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு கதறி அழ மட்டுமே அந்த பெண்ணால் முடிந்தது. தொடர்ந்து அந்த பெண் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீஸ் நிலையத்தில் அந்த பெண்ணிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த தகவல், அதே பகுதியில் இருந்த அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் 7 வயது மகளுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்த உறவினர்கள்,
அந்த பெண் பெற்ற குழந்தைதான் என போலீசாருக்கு உண்மை நிலையை விளக்கிக் கூறினர். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணையும் குழந்தையையும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாதபுரம் இன்ஸ்பெக்டர் சுனில் குமார் கூறுகையில், ''அந்த பெண் ராஜஸ்தானை சேர்ந்தவர். விழாக் காலங்களில், நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பிச்சையெடுத்து பிழைப்பை ஓட்டுபவர்கள். உண்மை நிலை தெரிய வந்ததும் உடனே விடுவித்து விட்டோம் '' என்றார்.