நடிகை ஸ்ரீதேவிக்கு பெரும் புகழ்பெற்றுக் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று மூன்றாம் பிறை. பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி இணைந்து நடித்த இப் படம் பெரு வெற்றி பெற்றது.
விபத்தொன்றையடுத்து, கடந்த கால வாழ்க்கையை மறந்து ஒரு சிறுமியின் குணாம்சம் கொண்டவராக ஸ்ரீதேவி அப்படத்தில் நடித்திருந்தார்.
1982 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 1983 ஆம் ஆண்டு பொலிவூட்டிலும் சத்மா எனும் பெயரில் வெளியானது.
இந்தியிலும் பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்தனர். தற்போது சத்மா படத்தை ரீமேக் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
விளம்பர படங்களை இயக்கி பெயர் பெற்ற லொய்ட் பப்டிஸ்டா, சத்மா ரீமேக் படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.
1983 இல் ஸ்ரீதேவி நடித்த பாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமான முன்னிலை நடிகையை லொய்ட் பப்டிஸ்டா தேடி வருகிறார்.
நடிகை வித்யாபாலன் இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என பப்டிஸ்டா கருதுகிறார். ஆனால், நடிகை வித்யா பாலன், இன்னும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஸ்ரீதேவியின் ரசிகையான வித்யா பாலன், ஸ்ரீதேவிக்கு ஈடாக அப்பாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியுமா என யோசிப்பதும் இத் தயக்கத்துக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.