சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் முழு நேர சமூக சேவகியாக மாறி மக்களுக்கு உதவுவேன் என்று நடிகை சமந்தா கூறினார்.
சமந்தா உதவி
சமந்தா கைவசம் தமிழ், தெலுங்கில் 6 படங்கள் உள்ளன. விஜய் ஜோடியாக ‘தெறி’, சூர்யா ஜோடியாக ‘24’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
மகேஷ் பாபுவுடன் நடிக்கும் ‘பிரமோற்சவம்’ படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. சமூக சேவை பணிகளிலும் ஈடுபடுகிறார்.
அறக்கட்டளை தொடங்கி குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைக்கும் உதவி வருகிறார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் முழு நேர சமூக சேவையில் ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
ஓய்வு இல்லை
நான் நல்ல நடிகையாக பெயர் வாங்கி விட்டேன். சினிமாவில் நடிப்பதோடு சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். இதனால் எனக்கு ஓய்வே கிடைப்பது இல்லை.
இரண்டு வேலைகளையும் எப்படி உங்களால் செய்ய முடிகிறது? கஷ்டமாக இல்லையா? என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள்.
வேலை இல்லாமல் இருந்தால் தான் கஷ்டமாக இருக்கும். இந்த உலகத்தில் என்னை விட அழகான பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
என்னை விட திறமைசாலிகளும் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கடவுள் எனக்கு கதாநாயகி என்ற அந்தஸ்தை தந்து இருக்கிறார். எனவே சினிமா தொழிலை உயர்வாக நேசிக்கிறேன்.
சினிமா மீது எனக்குள்ள காதலுக்கு எல்லையே கிடையாது. எப்போதும் படப்பிடிப்புகளிலேயே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
படப்பிடிப்பு அரங்கை விட்டு வீட்டுக்கு செல்ல இஷ்டம் இல்லை. படப்பிடிப்பில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. சினிமாவே எனது வாழ்க்கையாகவும் மாறி விட்டது.
சமூக சேவகி
திறமை, பணம், புகழ் எல்லாவற்றையும் கடவுள் எனக்கு அளவுக்கு மீறி கொடுத்து விட்டார். இந்த நன்றிக்கடனுக்காக ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன்.
சினிமா வாய்ப்புகள் குறைந்து அதை விட்டு விலகும் நிலை வரும்போது முழு நேர சமூக சேவகியாக மாறி மக்களுக்கு சேவை செய்வேன்’’.
இவ்வாறு சமந்தா கூறினார்.
Tags: