விக்ரமுக்கு விருது... தேசிய விருதுக்கான இழப்பு ஸ்ரீராம் !

'ஐ' படத்திற்காக விக்ரமுக்கு விருது அளிக்காதது தேசிய விருதுகளுக்கான இழப்பு என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார்.
விக்ரமுக்கு விருது... தேசிய விருதுக்கான இழப்பு ஸ்ரீராம் !
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 2015ம் ஆண்டு வெளியான படம் 'ஐ'. 

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்திற்காக விக்ரம் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருந்தார். இப்படத்தின் பாத்திரத்திற்காக உடலை இளைத்து, கூட்டி என மிகவும் மெனக்கெட்டு நடித்தார்.

63வது தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டதில் விக்ரமிற்கு எந்த ஒரு தேசிய விருதும் அறிவிக்கப் படவில்லை. ஜனவரி 10ம் தேதி சென்சார் செய்யப்பட்ட படம் என்பதால், தேசிய விருதுகள் தேர்வு பட்டியலில் 'ஐ' திரைப்படம் இருந்தது.

விக்ரமுக்கு விருது கிடைக்காததால் ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். 
மேலும், 'ஐ' படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் "விக்ரமுக்கு (கென்னி) விருது ஏதும் இல்லை. வருந்துகிறேன். தேசிய விருதுகள் பல நேரங்களில் அதன் நோக்கத்தை இழந்து விடுகிறது. 

என்னைப் பொருத்தவரை இது விக்ரமுடைய இழப்பு அல்ல; இது தேசிய விருதுகளுக்கான இழப்பு." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விக்ரமுக்கு விருது கிடைக்காதது குறித்து 'ஐ' படக்குழுவும் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது
Tags:
Privacy and cookie settings