ஒரே நாளில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளி, இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் மாநில அளவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலைத்தள பிரபலமாகியிருக்கிறார்.
இதுவும் தற்போது வைரல் செய்தியாகி உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாற்றாக இரண்டுமுறை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தவர் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, அவரின் முழு நம்பிக்கையை பெற்றவர் என்பதால் பன்னீர் செல்வம் முதல்வர் நாற்காலியை இரண்டுமுறை அலங்கரித்தார்.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்திக்காமல், இருமுறை தமிழகத்தின் முதல்வர் என்ற அந்தஸ்தை பன்னீர் செல்வம் அடைந்தது தமிழகத்திற்கு புதியது. இது அதிமுக தவிர மற்ற அரசியல் கட்சிகளிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம்.
ஆனால் அண்மைக்காலமாக அதிமுகவில் தனக்கான தனி அணி ஒன்றை திரட்ட ஓபிஎஸ் திட்டமிட்டு காய் நகர்த்தியதாகவும், இதனாலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் குட்புக்கிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாகவும் அதிமுகவினர் மத்தியில் பேசப்படுகிறது.
கட்சியில் தனக்கு என்று ஆதரவாளர்களை உருவாக்கியும், 2016 சட்டமன்ற தேர்தலில் தான் விரும்பும் நபர்களுக்கு வேட்பாளர் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 100 பேரிடம் கோடிகளில் தொகைப் பெற்றதாகவும் வெளியான தகவல்கள் கார்டனை எட்டி, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அவருக்கு 'செக்' வைக்கும் வகையில், ஓபிஎஸ் ஆதரவைப் பெற்ற அமைச்சர்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டும், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டும் ஜெ. ஷாக் கொடுத்தார் என்றும்
இது சசிகலா ஆதரவோடு நடந்தது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது இந்நிலையில் இந்த விவகாரங்கள் ஊடகங்களிளும், இணையதளங்களிலும் செய்திகளாக வெளியாகி நேற்று (வியாழன்) பரபரப்பை உண்டாக்கியிருந்தது.
அதன் விளைவாக இணையதளங்களில் ஓ.பி.எஸ். அதிகம் தேடப்பட்டுள்ளார் என்று புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. கூகுள் ட்ரெண்டில் இந்தத் தேடல் இன்றும் தொடர்கிறது. தமிழகத்தின் சென்னை, கோவை ,மதுரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பன்னீர் செல்வமே ட்ரெண்டில் இருந்துள்ளார்.
அதில் பாதியளவே ஜெயலலிதாவை இணையதளங்களில் தேடியுள்ளனர். அதே போல ட்விட்டர் பக்கத்தில் #OPS4CM என இந்திய அளவில் ஓபிஎஸ் டிரெண்டில் வந்துள்ளார்.
இதெல்லாம் அதிமுக அறியாத தேடல்கள். ஆக,ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் அதிமுகவில் பன்னீர் செல்வம் செல்வாக்குப் பெற்று வருகிறார் என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் இணையதள வாசிகள்.
தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசினாலே மறுநாள் பதவி இழக்கும் அமைச்சர்கள் மத்தியில், பன்னீர் செல்வம் இந்தியா ட்ரெண்ட் ஆகியிருப்பது போயஸ் கார்டனை எந்த மாதிரி ரியாக்ட் பண்ண வைக்கப்போகிறது என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.