நகை வியாபாரிகள் போராட்டமும்.. அரசின் உறுதிமொழியும் !

மத்திய அரசு தந்த உறுதிமொழியால் தங்க நகை வியாபாரிகள் 17 நாட்கள் நடத்திய கடையடைப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று முதல் தங்க நகை கடைகள் வழக்கம் போல் இயங்கும்.


மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் அறிவிப்பில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் அதிருப்தியடைந்த சுமார் 358 கூட்டமைப்புகளைச் சார்ந்த நகைக்கடை உரிமையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோர் மார்ச் 2-ம் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அகில இந்திய தங்க ஜூவல் லர்ஸ் மற்றும் ஸ்வர்ன்கர் நடவடிக்கை குழு (ஏஐபிஜிஎஸ்) டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் மிகப்பெரிய பேரணியை நடத்தினர்.

அகில இந்திய சபாரா கூட்ட மைப்பின் துணைத்தலைவர் சுரேந்திர் குமார் ஜெயின் தொடர் வேலை நிறுத்தம் பற்றி கூறுகையில், இந்த வேகமான நடைமுறையால் வாடிக்கையாளர்கள் திருமண காலங்களின்போது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரிகளின் கீழ் தங்க நகைகளை கொண்டு வரும் நோக்கத்தில்தான் ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை திரும்ப பெற முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இந்நிலையில், தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத உற்பத்தி வரியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நகை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

இந்த கடையடைப்புப் போராட்டத்தால் இந்தியாவில் ரூ.80,000 கோடி , தமிழகத்தில்ரூ. 6,500 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசுடன் நகைக் கடை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலால் வரி நிர்ணயம் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு மாதத்துக்குள் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சுமார் 35 ஆயிரம் நகைக் கடைகளும் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும் என்று சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சல்லானியும் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings