அதிக போதையில் டாஸ்மாக் கடையிலேயே உயிரிழந்த குடிமகனின் உடலை அப்புறப்படுத்து கிறேன் பேர்வழி என ஆளாளுக்கு தள்ளிவிட குடிமகன் உடல் 3 தெருக்களை சுற்றிவந்து கடைசியில் கண்டுபிடிப்பதே சிரமமமாகிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என்.என். கார்டன் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று மாலை கூட்டம் நிரம்பிவழிந்த நிலையில் அங்கு குடிக்க வந்த வாலிபர் ஒருவர் அதிகபோதையில் பாரின் உள்ளேயே மரணமடைந்திருக்கிறார்.
ஆனால் போதை தலைக்கேறி மயக்கத்தில் கிடப்பதாக நினைத்து சக குடிமகன்கள் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.
நேரம் செல்லச்செல்ல வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவாக இருப்பதாக கருதிய கடையின் ஊழியர்கள் வாலிபரின் உடலை துாக்கிவந்து கடையைத்தள்ளி சற்றுதுாரத்தில் வீசி எறிந்தனர்.
உடல் வீசப்பட்ட இடத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் இதனால் எரிச்சலாகி உடலை இன்னும் சற்று துாரத்தில் துாக்கிச்சென்று கிடத்திவிட்டனர். கிட்டதட்ட 2 மணிநேரத்தில் அந்த உடல் 4 தெருக்களை சுற்றிவந்தவிட்டது.
ஒருகட்டத்தில்தான் வாலிபர் மயக்கத்தில் இல்லை என்பதும் அவர் இறந்துவிட்டதும் அங்கிருந்த பொதுமக்களுக்கு தெரியவந்து அதிர்ச்சியானார்கள்.
உடனடியாக இத்தகவலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சொல்ல அங்கிருந்து எந்த பதிலுமில்லை. இதனிடையே இறந்த வாலிபரின் நண்பர்கள் உதவியுடன் அவர் யார் என தெரியவந்தது.
ஏற்கனவே அப்பகுதியில் வசித்தவரான அவர் எங்கிருந்தாலும் மாலை நேரத்தில் தம் நண்பர்களை சந்தித்து ‘உற்சாகப்படுத்திக் கொள்ள’ அந்த பாருக்கு தான் வருவாராம். அப்படி வந்தசமயத்தில்தான் இப்படி ஒரு பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே இப்படி சுற்றிவந்த வாலிபர் உடல் காணாமல் போய்விட்டது. உடனடியாக அவரது நண்பர்கள் அதை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கிட்டதட்ட ஒருமணிநேர தேடுதல் வேட்டைக்குப்பின் அதே பகுதியில் காளிங்கராயன் 3 வது தெருவில் உடல் கிடைக்க அதை பாதுகாத்தபடி காவல்துறைக்கு தகவல் தந்துவிட்டு காத்திருக்கிறார்கள் அவர்களது நண்பர்கள்.
தகவல் அளித்து கிட்டதட்ட 3 மணிநேரமாகியும் இதுவரை சம்பவ இடத்திற்கு காவல்துறை செல்லாததுதான் பொதுமக்களுக்கு இன்னும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பம் குழந்தை என்ற அழகான வாழ்க்கை வட்டத்திலிருந்து வெளியே சுகம் தேடி விட்டில் பூச்சிகளாய் தங்கள் வாழ்க்கையை வீதியில் தொலைத்துநிற்கும் இந்த வாலிபர்களை என்னவென்று சொல்வது..