பிரஸ்ஸல்ஸ் மெட்ரோ ரயில் தாக்குதலில் பலியான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசனின் உடல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து இன்று சென்னை வருகிறது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் பணியாற்றி வந்தவர் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன்.
அவர் கடந்த 22ம் தேதி மெட்ரோ ரயிலில் பணிக்கு சென்றபோது அதே ரயிலில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் ராகவேந்திரன் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து விட்டதால் அவரது பெயர் மாயமானவர்களின் பட்டியலில் இருந்தது. இந்நிலையில் பிரஸ்ஸல்ஸ் சென்ற அவரது பெற்றோர் மற்றும் தம்பி அவரின் உடலை அடையாளம் காட்டினர்.
இதையடுத்து கணேசனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கணேசனின் உடல் ஆம்ஸ்ட்ர்டாம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.