ஆதரவற்றவர் களுக்காக அரசு சார்பில் அம்மா குழந்தைகள் காப்பகம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில் 656 குழந்தைகள் கடத்தப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.
கடந்த மாதம் சென்னை வால்டாக்ஸ் சாலையில், பெருமாள்-லட்சுமி தம்பதி பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியபோது, தங்களது 6 மாத பெண் குழந்தை சரண்யாவை பறிகொடுத்தனர்.
குழந்தை காணாமல் போனது குறித்து பூக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், குழந்தை சரண்யா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
குழந்தை சரண்யா கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை, சென்னை பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி காவல் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் வசிக்கும் விமல்,
நேத்தா தம்பதியரின் 3வது மகன் ரோகேஷ் . 8 மாத கைக் குழந்தையான ரோகேசுடன் தம்பதியர் உறங்கியுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு மேல் குழந்தையை காணவில்லை.
ரோகேஷ் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, சட்டக்கல்லூரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரோகேஷ் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்படும் குழந்தைகள் பிச்சை எடுக்க வைக்கப்படுகிறார்கள் என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்துக்குள் 2 குழந்தைகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஆதரவற்ற நிலையில் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களின் குழந்தைகள்தான் மாயமாகி வருகின்றனர்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்த நடிகர் பார்த்திபன்,
காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து, சென்னையில் காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி ஒரு மனு கொடுத்தார்.
சென்னை நகரின் பிளாட்பாரங்களில் தூங்கிக்கொண்டிருந்த விமல் என்ற 8 மாத குழந்தையையும், சரண்யா என்ற 9 மாத குழந்தையையும் சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றுவிட்டனர்.
இப்படி கடத்தப்படும் மற்றும் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க லதா ரஜினிகாந்தின் தயா பவுண்டேஷன், எம்.பி.நிர்மலின் எக்ஸ்னோரா அமைப்பு, எனது பார்த்திபன் மனிதநேய மன்றம் ஆகிய மூன்றும் இணைந்து 'அபயம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.
தமிழகத்தில் தினமும் 5 குழந்தைகள் காணாமல் போகின்றனர். கடந்த 22ம் தேதி ஒரே நாளில் மட்டும் 21 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். 2014ம் ஆண்டில் 441 குழந்தைகளும், 2015ல் 656 குழந்தைகளும்,
இந்த ஆண்டில் இதுவரை 450 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். இதில் மூன்றில் ஒரு குழந்தை மட்டுமே மீட்கப்படுகிறது. சென்னையில் 2014ல் 114 குழந்தைகளும், 2015ல் 149 குழந்தைகளும்,
இந்த ஆண்டில் இதுவரை 58 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர் என்று மாநில குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இப்படி காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையைதான் காவல் ஆணையரிடம் வைத்திருக்கிறேன். அவர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.
எங்களை விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் கூறியிருக்கிறார். அரசு சார்பில் அம்மா குழந்தைகள் காப்பகம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்.
விரைவில் தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். காணாமல் போகும் மற்றும் கடத்தப்படும் குழந்தைகளை பலர் பிச்சை எடுக்கவும், தவறான நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
சென்னையில் குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களைப் பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பார்த்திபன் கூறியுள்ளார். டுவிட்டரில் பதிவு முன்னதாக நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில் 656 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், சென்னையில் குழந்தை கடத்தல் தொடர்கிறது, பிளாட்பாரங்களில் பெற்றோர்களுடன் படுத்துறங்கும் பிஞ்சு குழந்தைகள் மாயமாகின்றன. கடந்த மாதத்தில் 2 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த வருடத்தில் தமிழ்நாட்டில் 656 குழந்தைகள், அதில் பெண் குழந்தைகள் 305 மாயமான குழந்தைகள் நிலவரம் எல்லாம் கலவரமாகவே உள்ளது. தன் குட்டிகளை பாதுகாக்க காட்டில் மிருகங்கள் படும்பாட்டை விட வல்லரசாகப் போகும்
நம் நாட்டில் மிருகத்தனமான கடத்தலை செய்பவர்களை தெய்வம் நின்று கொல்லும் முன்னதாக காவல்துறை கண்டு கொள்ள வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், கம்பிகளின் இடைவெளிகள் கடுமையான சட்டங்களால் அடைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக 6 மாத, 8 மாத குழந்தைகளை அபகரித்து செல்வது என்பது நம்மை உயிரோடு அறுத்து ரத்தமும் சதையுமான நம் இதயத்தை கிண்டி கிளறி நம் உடலில் இருந்து பிடிங்கு செல்வதை போன்ற காட்டுமிராண்டி தனமானது.
இன்னும் தாய்ப்பால் கூட நிறுத்தாத பிஞ்சு உயிர்களான விமல், சரண்யாவை போல் பலர் இன்னும் பட்டியல் நீள்கிறது.
இன்னும் தாய்ப்பால் கூட நிறுத்தாத பிஞ்சு உயிர்களான விமல், சரண்யாவை போல் பலர் இன்னும் பட்டியல் நீள்கிறது.
நெஞ்சு வரண்டு அலறுவது நம் காதுகளில் கேட்கும். அதை தடுக்க வேண்டும். அடுத்து இன்னொரு உயிரை நம்முடைய உயிராய் நினைத்து காப்போம் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.