இமான் அண்ணாச்சியின் முதல் அரசியல் மேடை பேச்சு !

சென்னை கொளத்தூர் தொகுதியில், தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்த திரைப்பட நடிகரும்,
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி, சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "ஸ்டிக்கர் ஒட்டி அ.தி.மு.க ஆட்சி தொடங்கியது. அதன் உச்சகட்டமாக மழைவெள்ளத்தின் போதுகூட சோத்து பொட்டலத்தில் ஸ்டிக்கர் ஒட்டினார்கள். புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 

மக்கள் நலத்திட்டங்களை முடக்கினார் ஜெயலலிதா. முந்தைய தி.மு.க ஆட்சியில் 108 அவசர ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. கூப்பிட்ட உடன் மின்னல் வேகத்தில் வருவார்கள். 

பல லட்சம் பேர் உயிரை காத்த, உயிர் காக்கும் திட்டத்தை ஜெயலலிதா அரசு முடக்கி விட்டது. அதற்கு நானே சாட்சி. 108 ஆம்புலன்ஸ் திட்டத்தையே கொத்தி குதறி விட்டார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்பு, சூட்டிங் விஷயமாக மதுரவாயல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தேன். சாலை விபத்தில் படுகாயமுற்று கிடந்த ஒரு பெண்ணையும், 

ஒரு பையனையும் காப்பாற்ற அங்கு நின்றவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். 108-க்கு போன் செய்து விட்டு காத்திருந்தார்கள். நானும் எனது பங்கிற்கு 108-க்கு போன் போட்டேன். வரவில்லை.

காயமடைந்த இருவருக்கும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் எனது காரில் அவர்கள் இருவரையும் கொண்டு சென்று தாம்பரத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். 

ரூ.10 ஆயிரம் கட்ட சொன்னார்கள். அதை கட்டி, தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களை சேர்த்து விட்டு அவர்களது குடும்பத்துக்கு தகவல் கொடுத்தேன். அந்த பெண் குணமாகி விட்டாள். பையன் இன்னும் ஐசியுவில் இருக்கிறான்.

ஆஸ்பத்திரிக்கு சென்று ஒரு மணி நேரம் கழித்து 108 ஆம்புலன்ஸில் இருந்து போன் வந்தது. நீங்கள் வர வேண்டாம். வீட்டுக்கு போங்கள் என்று கூறிவிட்டேன். 

நல்லாட்சி, நல்லாட்சி என்று ஆளும்கட்சியினர் சொல்கிறார்கள். இதுவா நல்லாட்சி. இருக்கும் திட்டங்களை மெருக்கேற்றாமல் அதை சீரழித்ததுதான் இந்த ஆட்சியின் பெருமை. 

தமிழகத்தில் இந்த ஐந்து ஆண்டில் ஆட்சி நடந்ததா? நடக்கிறதா? இப்போது அம்மாவுக்கு தேவை ரெஸ்ட். கலைஞர் தமிழ்நாட்டை பார்த்துக் கொள்வார்" என்று பேசினார்.
Tags:
Privacy and cookie settings