சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார்.
அவரது அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முழு மனதோடு வரவேற்கிறோம்: வைகோ
"விஜயகாந்தின் இந்த முடிவால் ஒரு அரசியல் கட்சியின் கூடாரம் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும். விஜயகாந்த் பேரம் பேசுகிறார் என்றெல்லாம்
அவர் மீது கலங்கம் சுமத்தப்பட்டு நச்சுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவை அத்தனையும் இப்போது நொறுங்கிவிட்டது. விஜயகாந்த அறிவிப்பை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.
ஊழலை எதிர்க்கும் விஜயகாந்துக்கு மக்கள் நலக் கூட்டணியே இயல்பான தேர்வாக இருக்கும்" என மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.
வியூகங்களும் வதந்திகளும் உண்மையாகாது: வாசன்
"தேர்தலில் தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் தனது இறுதி முடிவினை மக்கள் நலன் சார்ந்து தனது இயக்க நலன் சார்ந்து அறிவித்துள்ளார். எந்த இயக்கத்துக்கும் ஓர் அரசியல் முடிவை எடுப்பதற்கு முழு அதிகாரம் உள்ளது.
அந்த வகையில் விஜயகாந்த் முடிவெடுத்துள்ளர். மேலும், ஊகங்களும் வதந்திகளும் உண்மையாகாது என்பதை அவரது முடிவு நிரூபித்துள்ளது" என தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திமுகவை புறக்கணித்தது ஆறுதல்: தமிழிசை
"ஊழல் கூட்டணியான திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்வார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பழம் நழுவி பாலில் விழும் என்ற கருத்தை பொய்யாக்கிய விஜயகாந்தின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது.
ஆனால், பாஜக தலைமையில் தேமுதிக கூட்டணி அமைய வேண்டும் என நாங்கள் நினைத்தது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்; அதிமுக, திமுகவுக்கு ஒரு மாற்று சக்தியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே.
தனித்தனியாக சக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற சூழல் வந்தால் அதற்கும் பாஜக தயாராக இருக்கிறது" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
கொள்கையை நிலைநாட்டியிருக்கிறார்: முத்தரசன்
"திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேராமல் தனது கொள்கையை விஜயகாந்த் நிலைநாட்டியிருக்கிறார். மக்கள் நலக் கூட்டணியும் ஊழலுக்கு எதிரானதே.
எனவே, எதிர்காலத்தில் ஒரே கொள்கையுடைய எங்களுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது" என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்தே: திருமாவளவன்:
"விஜயகாந்தின் இந்த முடிவு எதிர்பார்த்தது தான். அவரது இந்த அறிவிப்பால் மக்கள் நலக் கூட்டணிக்கு எவ்வித பின்னடைவும் இல்லை. அதிர்ச்சியும் இல்லை. அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த திமுக, பாஜகவுக்கே இம்முடிவு அதிர்ச்சியளிப்பதாக இருக்கும்.
மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்தால் அதுகுறித்து பரிசீலிப்போம்" என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பில்லை: குஷ்பு
விஜயகாந்த் முடிவால் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு ஏமாற்றம்: அழகிரி
"விஜயகாந்தின் முடிவு திமுகவுக்கு பெருத்த ஏமாற்றம். திமுகவில் ஸ்டாலின் இருக்கும்வரை அக்கூட்டணியில் தேமுதிக சேராது" என திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக விஜயகாந்த் முடிவை வரவேற்கும் வகையிலேயே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.