சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி, ஸ்ரீ வைகுண்டம் மற்றும் நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் திமுக எம்பியும் மகளிர் அணி செயலருமான கனிமொழி
போட்டியிடக் கூடும் என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளை கனிமொழி நடத்தி வருகிறார்.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கவும் ராஜ்யசபாவில் அவர் குரல் எழுப்பினார். தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை எம்.பி.க்கள் நிதியின் கீழ் தத்தெடுத்திருந்தார்.
அண்மையில் நெல்லையில் மதுவுக்கு எதிராக விதவைகளை ஒருங்கிணைத்தும் ஒரு மாநாட்டை கனிமொழி நடத்தியிருந்தார். இதேபோல் நாங்குனேரியில் ரயில் என்ஜின் தொழிற்சாலை, கருமேனி - நம்பியாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்;
உடன்குடி அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டும் எனவும் கனிமொழி வலியுறுத்தி வருகிறார். அத்துடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்;
இப்பகுதியில் நாடார் சமூகத்தினர் அதிகம்; இதனால் கனிமொழி தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் கடந்த ஓராண்டு காலமாகவே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனடிப்படையில் கனிமொழி தூத்துக்குடி, ஸ்ரீ வைகுண்டம், திருநெல்வேலி தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நிறுத்தப்படும் போது தென்மாவட்ட கட்சியினர் உற்சாகமாக ஒற்றுமையுடன் தேர்தல் பணி செய்வர் எனவும் எதிர்பார்க்கிறதாம் திமுக தலைமை.