மறைந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர், முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை காண்பித்தது தற்போது புது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
வெள்ள நிவாரண பணிகளின் போது, நிவாரண பொருட்களில் ஜெயலலிதா படம் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டியது.
சில நாட்களுக்கு முன் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களின் தலையில் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை வைத்தது போன்றவை சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது மறைந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போதும் ஜெயலலிதாவின் படத்தை அமைச்சர் காண்பித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 10 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் கணேசன் என்பவரும் ஒருவர்.
அவரது உடல், சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் வந்திருந்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ, ”மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சார்பாக” என்று எழுதப்பட்ட மலர் வளையத்தை வைத்தார்.
அத்தோடு, ராணுவ வீரரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினார். அதை, மறைந்த ராணுவ வீரர் கணேசன் தாயார் கண்ணீருடன் வாங்கிக் கொண்டார்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை காண்பித்து நன்றி தெரிவிக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.