இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரரான தலிப் சிங் ராணா எனப்படும் ’தி கிரேட் காளி’ WWE போன்ற போட்டிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானியில் நடைபெற்ற மல்யுத்த போட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது அமெரிக்காவின் மைக் நாக்ஸ்,
கனடாவின் புரூடி ஸ்டீல் ஆகியோர் தலிப் சிங்கை நாற்காலி மூலம் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக டெஹ்ராடூனில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டன. இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்ட அவர் தன்னை தாக்கியவர்களை வீழ்த்துவேன் என்று சபதம் எடுத்தார்.
இதன்படி நடந்த 2வது போட்டியில் ’தி கிரேட் காளி’ அமெரிக்காவின் மைக் நாக்ஸ், அப்போலோ லியோன், கனடாவின் புரூடி ஸ்டீல் ஆகியோரை சந்தித்தார்.
மிகுந்த ஆக்ரோஷத்துடன் விளையாடிய காளி, எதிரணியை நாற்காலியால் தாக்கி பதிலடி கொடுத்து வெற்றி பெற்றார்.