ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் Out... தங்கத் தமிழ் செல்வன் In !

சென்னை மாவட்ட செயலாளர், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்பட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை மீண்டும் பறித்து ஜெயலலிதா நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 


தேனி மாவட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத் தமிழ் செல்வனுக்கு கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த ஐவரணி தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கட்சிப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஐவர் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் அவர்களது ஆதரவாளர்கள் வருகின்ற சட்டசபை அதிமுக சார்பில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கியதாக தலைமைக்கு தெரியவந்தது.

ஓபிஎஸ் மகன் மற்றும் கட்சியில் உள்ள இவரது ஆதரவாளர்களும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர் என்ற முழு தகவல்களையும் உளவுத்துறையினர் பட்டியல் போட்டு கொடுத்தனர். 

இதையடுத்து, கடந்த சில நாட்களாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உதவியாளர்கள், ஆதரவாளர்களை கட்சி பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக மீனவர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ரமேஷ் பதவி பறிக்கப்பட்டது. இவர், ஓபிஎஸ்சின் வலதுகரமாக செயல்பட்டவர். 

அதேபோன்று சென்னை, வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ எம்.கே.அசோக் வகித்து வந்த தென்சென்னை தெற்கு மாவட்ட வேளச்சேரி பகுதி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்த எல்லப்பட்டி எம்.முருகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளர் பொறுப்பில் இருக்கும் வரகூர் அ.அருணாசலம் ஆகிய ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களது பதவியும் பறிக்கப்பட்டது. 

அதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலாளர் பொறுப்பில் இருந்த கே.மாரியப்பன் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது. 

இவர், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தீவிர ஆதரவாளர். அதிமுக மூத்த அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் கடந்த மாதம் அதிமுக கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சிபாரிசால் சில மாதங்களுக்கு முன் தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.எம்.பாபுவின் மாவட்ட செயலாளர் பதவியையும்,

தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்த டி.ஆர்.என்.வரதராஜன் உள்ளிட்ட சிலரது கட்சி பதவியை பறித்தும், சிலரை முக்கிய பதவியில் இருந்து நீக்கி சாதாரண பதவியும் வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதில் சென்னை மாவட்ட செயலாளர் எம்.எம்.பாபு ஓ.பன்னீர்செல்வத்தின் நிழல் போன்று செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் எம்.எம்.பாபு இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவர், ஏற்கனவே வகித்து வரும் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார். 

தென்சென்னை தெற்கு மாவட்ட பொறுப்பில் வி.என்.ரவி இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.என்.வரதராஜன், 
 
தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.ஆர்.ஜெகதீஸ், ஆண்டிப்பட்டி ஒன்றியம் மாவட்ட பிரதிநிதி பொறுப்பில் இருக்கும் எம்.ராஜ்குமார் ஆகியோர் இன்று முதல் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக தங்க தமிழ்செல்வன், தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக எம்.ராஜ்குமார், தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.செல்வம், தேனி மாவட்ட இளைஞர் பாசறை, 


இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் எம்.மணி, ஆண்டிபட்டி மாவட்ட பிரதிநிதியாக டி.ஆர்.என்.வரதராஜன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

கேரள மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீனிவாசன் வேணுகோபால், பொருளாளர் ஏ.எல்.பிரதீப் ஆகியோர் விடுவிக்கப்படுகிறார்கள். 

கேரள மாநில செயலாளர் ஏ.எல்.பிரதீப், பொருளாளர் ஸ்ரீனிவாசன் வேணுகோபால், கேரள மாநில சிறுபான்மையினர் நல பிரிவு மாநில செயலாளர் எஸ்.பி.எஸ்.பஷீர், திருவனந்தபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெ.சதீஷ்குமார், 

இடுக்கி மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சி.அப்துல்காதர், இடுக்கி மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளராக எல்.ராஜப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சென்னை, தேனி மற்றும் கேரளாவில் மாவட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் அனைவரும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். 

தேனியில் புதிதாக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வத்தை தேனி மாவட்டத்தில் நேரடியாக எதிர்த்து பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகிறார்.

2002ம் ஆண்டு ஜெயலலிதா ஆண்டிபட்டி தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிடுவதற்காக தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்து வந்தார். 

தங்க தமிழ்செல்வன் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்த காரணத்தினாலே கடந்த 5 ஆண்டுகளாக டம்மியாக்கப்பட்டார். கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது.

தங்கத் தமிழ் செல்வனுக்கு இப்போது பதவி வழங்கப்பட்டுள்ளதன் மூலம், ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை தேனி மாவட்டத்தில் இல்லாமல் செய்வதற்காகத்தான் என்று கூறப்படுகிறது. 

மேலும், தேர்தல் வர உள்ள நேரத்தில் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்களை தொடர்ந்து ஜெயலலிதா நீக்கி வருவது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.


அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதால், அவரால் சென்னையில் மாவட்ட செயலாளர் பதவி கிடைத்த தி.நகர் சத்யா கலக்கத்தில் உள்ளார். 

காரணம், தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்.எம்.பாபு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர் என்பதாலேயே நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings