சீன பெண்ணை திருமணம் செய்த தமிழர் !

இத்தாலி கப்பலில் பணிபுரிந்த போது சீனப் பெண்ணை காதலித்த மதுரை இளைஞர் ஒருவர் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய உள்ளார்.
சீன பெண்ணை திருமணம் செய்த தமிழர் !
மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் ராக்பெல்லர் என்ற பார்த்தீபன் (29), தற்போது சீனாவில் ஷாங்காய் மாநகரில் உள்ள தனியார் ஹொட்டல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இவரும், சீனாவின் ஷாங்காயை சேர்ந்த லீயூஜியும் (27) கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பார்த்தீபனின் காதல் கதையை அவரது நண்பர் பாக்கியராஜ் கூறுகையில்,

2004-ம் ஆண்டு என்னிடம் பயிற்சிப் பணிக்காக பார்த்தீபன் வந்தார். பயிற்சி முடித்தவுடன் பார்த்தீபனுக்கு இத்தாலி கப்பல் நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றார். 

அங்கு அவருடன் லீயூஜியும் பணிபுரிந்துள்ளார். ஒருமுறை கப்பல் நடுக்கடலில் சென்ற போது ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் சிக்கிய லியூஜியை பார்த்தீபன் காப்பாற்றி உள்ளார். 

அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. அவர்களுடைய காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இந்த சூழ்நிலையில், ஒருமுறை விடுமுறைக்காக சீனா சென்ற லீயூஜி மீண்டும் இத்தாலிக்கு திரும்பவில்லை. 

லியூஜியின் பெற்றோர், அவரை திருப்பி அனுப்பவில்லை. பார்த்தீபனால் லீயூஜியை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. 
காதலிக்காக இத்தாலியில் கப்பல் நிறுவன வேலையை உதறிய பார்த்தீபன், சுற்றுலா விசாவில் சீனாவுக்கு சென்று, ஷாங்காயில் உள்ள லீயூஜியை சந்தித்தார். 

அவரோ, பெற்றோரின் எதிர்ப்பை மீறி என்னால் உங்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார். 

அவரிடம் பெற்றோரை நான் சம்மதிக்க வைக்கிறேன் என கூறி ஷாங்காயிலேயே ஒரு ஹொட்டல் நிறுவனத்தில் 

சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைபார்த்த பார்த்தீபன், லீயூஜியின் பெற்றோரை சந்தித்துப் பேசியுள்ளார். 

லீயூஜியின் பெற்றோர் அவரிடம் நாடு கடந்து கலாச்சாரம் மாறி செய்யும் திருமணம் கடைசி வரை நீடிக்காது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒருகட்டத்தில் பார்த்தீபனின் நெருக்கடியால் லீயூஜிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் சீனாவைச் சேர்ந்த மணமகனை பார்த்து நிச்சயம் செய்தனர். 
தமிழகத்தில் பார்த்தீபன் வீட்டிலும் அவருக்கு பெண் பார்க்கத் தொடங்கினர். 

அதிர்ச்சியடைந்த இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் பேசி, அவர்களுடைய உண்மையான அன்பு, காதலை வெளிப்படுத்தி உள்ளனர். 

கடைசியில் அவர்களுடைய காதலை பெற்றோர் ஏற்றதை அடுத்து, தமிழ் கலாச்சார முறைப்படி மதுரையில் வரும் 24-ம் திகதி இருவருக்கும் திருமணம் நடக்கிறது என தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings