திருநெல்வேலியில், தியேட்டர் வாசலில் வைக்கப் பட்டிருந்த 140 அடி உயரமுள்ள கட் அவுட் சரிந்து விழுந்ததில், போலீஸ் வாகனம் கடுமையாக சேத மடைந்தது.
அதிர்ஷ்டவசமாக, வாகனத்திற்குள் காவலர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள தெறி படம் நேற்று உலகம் முழுவதும் ரீலிஸ் செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் 3 தியேட்டர்களில் தெறி திரைப்படம் திரையிடப் பட்டுள்ளது. நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஒரு தியேட்டரில் தெறி படம் வெளியிடப்பட்டது.
ரிலீஸ் நாளான நேற்று விஜய் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்திலும், வெளியே ரோட்டின் ஓரத்திலும் நடிகர் விஜய்யை வாழ்த்தி பல்வேறு கட்-அவுட்கள், டிஜிட்டல் போர்டுகள் வைத்து இருந்தனர்.
தியேட்டர் வளாகத்தில் 140 அடி உயரத்தில் பிரமாண்ட கட்அவுட் ஒன்றையும் வைத்து இருந்தனர். தியேட்டர் வாசலில் திருவிழா போல கூட்டம் காணப்பட்டது.
படத்தின் ரிலீஸ் நாள் என்பதால், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. படம் தொடங்கிய நிலையில், திடீரென தியேட்டருக்கு வெளியே வைக்கப் பட்டிருந்த 140 அடி உயர கட் அவுட் சரிந்து விழுந்தது.
இதில், அங்கு நிறுத்தப் பட்டிருந்த போலீஸ் வாகனம் சேதமடைந்தது. பலத்த காற்று வீசியதனாலேயே கட் அவுட் சரிந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் வாகனத்தில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.