இந்தியாவுக்குத் திரும்பி வர மாட்டேன்...விஜய் மல்லையா !

இப்போதைக்கு இந்தியாவுக்குத் திரும்பி வர மாட்டேன் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெற்ற வங்கிக் கடன் ரூ.9,400 கோடியை திருப்பிச் செலுத்தாதது 
உள்பட பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள மல்லையா இப்போது பிரிட்டனில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மேலும், மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புமாறு பிரிட்டன் அரசிடம், வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், லண்டனில் இருந்து வெளியாகும் "ஃபைனான்ஷியல் டைம்ஸ்' பத்திரிகைக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் மல்லையா கூறியிருப்பதாவது:

வங்கிக் கடன் பிரச்னைக்கு நியாயமான தீர்வைக் காண வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் எனது கடவுச் சீட்டை முடக்குவதன் மூலமாகவோ, என்னைக் கைது செய்வதாலேயோ பணத்தைப் பெற முடியாது.

நான் கட்டாய நாடு கடத்தல் நிலைக்கு உள்ளானேன். இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு நாடு திரும்பும் திட்டம் இல்லை. என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது பிரிட்டனில் இருப்பதையே சிறப்பானதாகக் கருதுகிறேன்.

தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள் தங்கள் கருத்துகளை பொதுமக்களின் கருத்து என திரித்து வெளியிடுகின்றன. சில விஷயங்களில் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் இந்த ஊடகங்கள் செயல்படுகின்றன.

கிங்ஃபிஷர் நிறுவனத்துக்காக வங்களில் பெற்ற கடனில் நான் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கியதாகக் கூறப்படுவது தவறான தகவல். கடனைத் திருப்பிச் செலுத்த மாட்டேன் என்று நான் எப்போதும் கூறியதில்லை.

எனது கடவுச் சீட்டை தாற்காலிகமாக முடக்குவதாக முதலில் நோட்டீஸ் வந்தது. அதற்கு நான் பதிலளித்தேன். ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் கடவுச்சீட்டை ரத்து செய்துவிட்டனர்.

நான் வேண்டுமென்றே கடனைத் திருப்பச் செலுத்தவில்லை என்று முத்திரை குத்துவது ஏன் என்று தெரியவில்லை. நான் சில தவறுகளைச் செய்திருக்கலாம். கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தில் பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளேன். 

நஷ்டம் ஏற்பட்டபோது அதில் இருந்து மீள நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பொருளாதாரக் காரணிகளும், அரசின் கொள்கை முடிவுகளும் நிறுவனத்தை மீள முடியாத அளவுக்கு கொண்டு சென்றுவிட்டன.

எப்போதுமே கடினமாக உழைத்துதான் வாழ்ந்து வந்துள்ளேன். இப்போதும் கூட கடன்களைத் திருப்பிச் செலுத்திவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ முயற்சித்து வருகிறேன். 

இந்தியாவில் உள்ள எனது பிற நிறுவனங்களை விற்பனை செய்ய மாட்டேன். ஏனெனில் அவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. என் மீதான களங்கத்தைத் துடைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார் விஜய் மல்லையா
Tags:
Privacy and cookie settings